மக்கள் கொரோனாவால் பரிதவிக்க... பிரித்தானிய எம்.பி.க்கள் நாடாளுமன்ற விடுதியில் மது அருந்திய தொகை எவ்வளவு தெரியுமா?
கொரோனா பெருந்தொற்றால் மொத்த மக்களும் பரிதவித்த நிலையில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த ஓராண்டில் மது அருந்திய தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஓராண்டில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள மதுபான விடுதியில் 133,000 பவுண்டுகள் தொகைக்கு எம்.பி.க்கள் மது அருந்தியுள்ளது தெரிய வந்துள்ளது.
முதல் தேசிய ஊரடங்கு அமுலுக்கு கொண்டுவரப்பட்ட மார்ச் மாதத்தில் மட்டும் 27,600 பவுண்டுகளுக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நாடு கொரோனா நெருக்கடியின் ஆரம்பத்தில் இருந்த நிலையில், நாடாளுமன்ற விடுதியில் சிப்ஸ்மித் ஜின் 800 க்கும் மேற்பட்ட ஷாட்களும் நூற்றுக்கணக்கான கிளாஸ் ஒயின் மற்றும் ஷாம்பெயின் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மார்ச் மாதத்திற்குப் பிறகு வர்த்தகம் முழுமையாக நிறுத்தப்பட்ட நிலையில், ஜூலை மாதத்தில் ஊரடங்கு விதிகளை தளர்த்தியதைத் தொடர்ந்து பப்கள் மற்றும் உணவகங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.
நாடாளுமன்ற வளாகத்தில் அப்போது மூன்று மதுபான விடுதிகள் செயல்பட்டுள்ளன. அதில் சுமார் 4,700 பவுண்டுகள் அளவுக்கு மது விற்பனை நடந்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் விற்பனை மீண்டும் தொடங்கியதை அடுத்து எம்.பி.க்கள், சுமார் 9,700 பவுண்டுகள் தொகைக்கு மது அருந்தியுள்ளனர்.
அக்டோபரில் மது விற்பனை 3,470 பவுண்டுகள் என சரிவடைந்துள்ளது. மொத்தத்தில் 2020-ல் மட்டும் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மது விற்பனை மட்டும் 133,672 பவுண்டுகள் என தெரிய வந்துள்ளது.
நாடாளுமன்றத்தின் உணவகங்கள் மற்றும் பார்களுக்கு நேரடியாக மானியம் வழங்கப்படவில்லை, இதனால் நஷ்டத்தில் இயங்குகின்றன, அதாவது பொதுமக்களின் வரிப்பணத்தில் நாடாளுமன்ற உணவகங்களும் மதுபான விடுதியும் திறம்பட செயல்பட்டு வருகின்றன என்றே கூறப்படுகிறது.