மேலும் ஒரு வழக்கில் கைது.., முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு தொடரும் நெருக்கடி
நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிலமோசடி வழக்க்கு
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர், கரூர் மாவட்டம் குப்பிச்சி பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை மோசடி செய்ததாக புகார் கொடுக்கப்பட்டது.
மேலும், இது குறித்து கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கரூர் காவல் நிலையத்திலும் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் அளித்தனர். அதன்படி, கரூர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதையடுத்து, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர்.
ஏற்கனவே, கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடியாகிய நிலையில் தான் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இதற்கிடையே சிபிசிஐடி பொலிஸார் 5 தனிப்படைகள் அமைத்து முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கரை தேட ஆரம்பித்தனர். அவர் வெளிமாநிலத்தில் தலைமறைவானார் என்று கூறப்பட்ட நிலையில் ஒரு மாதமாக அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், அவர் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனுவும் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, விஜயபாஸ்கர் கேரளாவில் தலைமறைவாகி இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனால், கேரளாவுக்கு விரைந்த பொலிஸார் அங்கு நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த விஜயபாஸ்கரை கைது செய்தனர். இதையடுத்து, எம்.ஆர்.விஜயபாஸ்கரை வரும் 31 -ம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் ஒரு வழக்கில் கைது
இந்நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வாங்கல் பொலிஸார் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவரை கைது செய்வதற்காக கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதியிடம் ஆவணங்களை காட்டி அனுமதி பெற்றனர்.
ஆகையால், இந்த கைது உத்தரவை திருச்சி மத்திய சிறையில் இருக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் வழங்கி கையெழுத்து பெறுவதற்காக பொலிஸார் திருச்சி சிறைக்கு சென்றுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |