இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த 'தல' தோனி!
'தல' என செல்லமாக அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி திடீரென இந்திய வீரர்களை நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சியை கொடுத்தார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ODI தொடரில் வென்ற பிறகு, அதே அணியுடன் இந்தியா இப்போது ஜனவரி 27 முதல் பிப்ரவரி 1 வரை மூன்று T20I போட்டிகளில் விளையாடவுள்ளது.
தொடரின் முதல் T20I போட்டி வெள்ளிக்கிழமை ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இப்போட்டியை முன்னிட்டு, இந்திய அணி ஜே.எஸ்.சி.ஏ மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது வீரர்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியம் கிடைத்தது.
Twitter @BCCI
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும், பல கிரிக்கெட் வீரர்களுக்கும் விருப்பமான 'தல' என்று தமிழ்நாட்டில் செல்லமாக அழைக்கப்படும் எம்எஸ் தோனி, ராஞ்சியில் வசிக்கும் வீரர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுடன், டிரஸ்ஸிங் ரூமில் அவர்களை சந்தித்தார்.
இந்த விலைமதிப்பற்ற தருணத்தின் வீடியோவை பிசிசிஐ ட்விட்டரில் பகிர்ந்து கொண்டது. வாஷிங்டன் சுந்தர் தோனியுடன் தனியாக பேசுவதையும் காண முடிந்தது.
BCCI அதன் ட்விட்டர் பதிவில் "இன்று ராஞ்சியில் பயிற்சிக்கு வந்தவர் யார் என்று பாருங்கள் - தி கிரேட் எம்எஸ் தோனி!" என்று தெரிவித்தது.
Look who came visiting at training today in Ranchi - the great @msdhoni! ?#TeamIndia | #INDvNZ pic.twitter.com/antqqYisOh
— BCCI (@BCCI) January 26, 2023
இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL 2023) வரவிருக்கும் சீசனுக்குத் தயாராகி வருவதால் தோனி JSCA ஸ்டேடியத்திற்கு வழக்கமான தனது பயிற்சிக்கு வந்துள்ளார். அவர் ஐபிஎல் போட்டியின் 16-வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸை (CSK) வழிநடத்தவுள்ளார், அதற்காக அவர் தன்னை தயார்படுத்த தொடங்கியுள்ளார்.
முதல் T20I போட்டிக்குப் பிறகு, ஜனவரி 29 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய திகதிகளில் அடுத்தடுத்த போட்டிகள் லக்னோ மற்றும் அகமதாபாத்தில் நடைபெறும்.