உலகின் பெரும் செல்வந்தர்: பிரித்தானியர்களுக்கே பணம் கடன் தந்த தொழிலதிபர் பற்றி தெரியுமா?
இந்தியாவில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் கோலோச்சிய காலத்தில் உலகின் பணக்கார தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டவர் இந்தியரான விர்ஜி வோரா என்கிறார்கள்.
கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்துடன்
இந்தியாவில் முகலாய ஆட்சி காலத்தில் மிகவும் அறியப்பட்ட நபரான விர்ஜி வோரா, 1617 மற்றும் 1670 காலகட்டத்தில் கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்துடன் இணைந்து தொழில் செய்து வந்துள்ளார்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், விர்ஜி வோரா ஒருமுறை கிழக்கிந்திய கம்பெனிக்கு ரூ.2,00,000 கடன் கொடுத்துள்ளார். 1590ல் பிறந்த விர்ஜி வோரா மொத்த வியாபாரியாக செயல்பட்டதுடன் அவரது தனிப்பட்ட சொத்து சுமார் 8 மில்லியன் ரூபாய் எனவும் கூறுகின்றனர்.
தற்போதைய பண மதிப்பில், விர்ஜி வோராவின் சொத்து மதிப்பை கணக்கிட்டால், இந்தியாவின் மிகப்பெரும் செல்வந்தரான முகேஷ் அம்பானியை விட மிக மிக அதிகம் என்றே கூறுகின்றனர்.
விர்ஜி வோரா மிளகு, தங்கம், ஏலக்காய் மற்றும் பிற பொருட்கள் உட்பட பல விலை உயர்ந்த பொருட்களை வணிகத்திற்கு பயன்படுத்தியுள்ளார். மட்டுமின்றி 1629 முதல் 1668 வரையான காலகட்டத்தில் பிரித்தானியர்களுடன் மிகப்பெரிய வணிகத்தில் ஈடுபட்டு, தமது வணிக சாம்ராஜியத்தை விரிவு படுத்திக்கொண்டுள்ளார்.
பிரித்தானிய வணிகர்களும்
பொதுவாக சந்தைக்கு வரவிருக்கும் ஒரு பொருளின் மொத்த கையிருப்பையும் வாங்கி, அதில் இருந்து பெரும் லாபத்தை ஈட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார் விர்ஜி வோரா.
பிரித்தானிய வணிகர்களும் இவரிடம் இருந்து பணம் கடனாக பெற்று, தொழில் செய்து வந்துள்ளனர். முகலாய பேரரசர் ஔரங்கசீப் ஒருமுறை நிதி நெருக்கடியில் சிக்க, தமது தூதுவர்களை விர்ஜி வோராவிடம் அனுப்பி கடன் வாங்கியுள்ளதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
விர்ஜி வோராவின் வணிகம் இந்தியா மற்றும் பாரசீக வளைகுடா, செங்கடல் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் துறைமுக நகரங்கள் முழுவதும் பரவியிருந்தது. அத்துடன், நாட்டின் முக்கிய வணிக நகரங்களில் தமது முகவர்களை பணியமர்த்தியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |