அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய சம்பவம்.., தலைமறைவாக இருந்த பாஜக பெண் நிர்வாகி கைது
அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பாஜக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
என்ன நடந்தது?
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் உருவான ஃபெங்கல் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.
அந்தவகையில், விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதனால், அங்குள்ள மக்கள் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வந்தனர் .மேலும், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டும் வந்தனர்.
இதன் காரணமாக , இருவேல்பட்டு பகுதியில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழக அமைச்சர் பொன்முடி சென்றிருந்தார்.அங்கு, வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் சாலைமறியலில் மக்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்களிடம், பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் பொன்முடி சென்றபோது அவர் மீது சேறு வீசப்பட்டது.
மேலும், அவருடன் ஆய்வுக்கு சென்ற கௌதம சிகாமணி, ஆட்சியர் உள்ளிட்டோர் மீதும் சேறு வீசப்பட்டது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.
பாஜக நிர்வாகி கைது
இதில் அமைச்சர் மீது சேற்றை வீசியது பாஜக தரப்பு என்று திமுக சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. அதாவது ராமர் என்கிற ராமகிருஷ்ணன் என்ற நபர் தான் சேற்றை வீசியுள்ளார். இவரது சித்தி விஜயராணி பாஜகவில் இருப்பதால் இவ்வாறு செய்ததாக அவர் கூறியுள்ளார்.
இதனால், பாஜக நிர்வாகிகளான ராமகிருஷ்ணன், விஜயராணி ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேடி வந்தனர்.
இதில், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ராம கிருஷ்ணனை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த விஜயராணியை 4 மாதங்கள் கழித்து நேற்று இரவு திருவெண்ணெய்நல்லூரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |