Mudra Loan: முத்ரா திட்டத்தின் கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்வு
பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
PMMY (Pradhan Mantri Mudra Yojana)
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு 2015 -ம் ஆண்டில் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா, (PMMY) என்னும் திட்டதை அறிமுகம் செய்தது.
இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் தொழில் தொடங்குபவர்கள் ரூ.10 லட்சம் வரை எளிதாக கடன் பெற முடியும்.
முத்ரா ஒரு மறுநிதியளிப்பு நிறுவனம் என்பதால் நேரடியாக கடன் வழங்காமல் வங்கிகள், பிற கடனளிப்பு நிறுவனங்கள் மூலம் கடன் வழங்க உதவுகிறது. அதாவது, சிறு தொழில்களுக்கு கடன் வழங்குவதற்கான நிதியை வங்கிகளுக்கு முத்ரா திட்டம் அளிக்கிறது.
3 விதமான கடன்கள்
* Shishu Mudra Loan - ரூ.50,000 வரை கடன் பெறலாம்.
* Kishor Mudra Loan - ரூ.50,000 -க்கு மேல் மற்றும் ரூ.5 லட்சம் வரை கடன் பெறலாம்.
* Tarun Mudra Loan - ரூ.5 லட்சத்துக்கு மேல் மற்றும் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்.
ரூ.20 லட்சமாக உயர்வு
இந்நிலையில் மத்திய அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், "2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் 2024, ஜூலை 23 அன்று நிதியமைச்சர் அறிவித்தபடி, பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த அதிகரிப்பு, நிதி பெறாதவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் முத்ரா திட்டத்தின் ஒட்டுமொத்த நோக்கத்தை மேலும் வலுப்படுத்தும். இந்த அதிகரிப்பு குறிப்பாக எதிர்கால தொழில்முனைவோருக்கு அவர்களின் வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கும் உதவும்.
இந்த நடவடிக்கை வலுவான தொழில்முனைவோர் சூழல் அமைப்பை வளர்ப்பதில் அரசின் கடப்பாட்டை உறுதி செய்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, புதிய வகை தருண் பிளஸ் திட்டம் ரூ .10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான கடன்களுக்கானது.
ஏற்கனவே தருண் வகையின் கீழ் கடன் பெற்று வெற்றிகரமாக திருப்பிச் செலுத்திய தொழில்முனைவோருக்கு ரூ.20 லட்சம் வரை கடன் கிடைக்கும்.
பிரதமரின் முத்ரா திட்டத்தின் கடன்களுக்கான உத்தரவாதக் காப்பீடு நுண் அலகுகளுக்கான கடன் உத்தரவாத நிதியின் கீழ் வழங்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, தற்போது தருண் பிளஸ் என்ற பெயரில் புதிய வகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |