மகாபாரதத்தில் அர்ஜுனன் போல்., மெஸ்ஸியை புகழ்ந்து பேசிய முகேஷ் அம்பானி
அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை மகாபாரத கதாபாத்திரங்களில் ஒன்றான அர்ஜுனனுடன் ஒப்பிட்டு புகழ்ந்து பேசியுள்ளார் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி.
இதை முகேஷ் அம்பானி தனது தந்தை திருபாய் அம்பானியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பகிர்ந்து கொண்டார்.
ரிலையன்ஸ் குடும்ப தினம்
ரிலையன்ஸ் குடும்ப தினமாக கொண்டாடப்படும் தந்தை திருபாய் அம்பானியின் பிறந்தநாளில் பேசிய முகேஷ் அம்பானி, FIFA உலகக் கோப்பை 2022-ல் அர்ஜென்டினாவின் நம்பமுடியாத வெற்றியைப் பற்றி பேசினார்.
உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்தாலும், மெஸ்ஸியின் தலைமையில், கூட்டுமுயற்சி மற்றும் நல்ல தலைமைத்துவத்தால் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது.
இதனால், உலகக்கோப்பையில் அர்ஜென்டினாவையும் லியோனல் மெஸ்ஸியையும் மகாபாரதத்தின் அர்ஜுனனுக்கு இணையாக முகேஷ் அம்பானி ஒப்பிட்டு பேசியுள்ளார்.
மகாபாரதத்தில் அர்ஜுனன் போல்..,
அவர் பேசியதாவது: “உலகக் கோப்பையை அர்ஜென்டினா எப்படி வென்றது? தலைமை மற்றும் ஒத்துழைப்பு இரண்டும் ஒரே புள்ளியில் ஒன்றிணைவதே இதற்குக் காரணம். மெஸ்ஸியின் கேப்டன்சி இல்லாமல் அர்ஜென்டினாவால் கோப்பையை வென்றிருக்க முடியாது. அவருக்கும் அதே. அணி இல்லாமல் அவர் கோப்பையை வென்றிருக்க முடியாது.
அவர்களுக்கு வெற்றி பெறவேண்டும் என்ற கனவு இருந்தது. அவர்கள் அந்தக் கனவை மூச்சுக்காற்று போல் சுவாசித்தார்கள். மேலும், வெற்றி பெற தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தனர். இறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் வரை அது தொடர்ந்தது. முதல் போட்டியில் தோல்வியடைந்தாலும், அவர்கள் கைவிடவில்லை. அர்ஜுனன் தன் அம்பினால் பறவையின் கண்ணை எப்படி குறிவைத்தானோ அப்படித்தான் அவர்கள் செயல்பட்டார்கள்” என்றார்.
முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பெட்ரோ கெமிக்கல்ஸ், எண்ணெய் மற்றும் எரிவாயு, தொலைத்தொடர்பு மற்றும் சில்லறை விற்பனை போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளார். இவரது சொத்து மதிப்பு 89 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இந்தியாவில் அவர் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரர் ஆவார்.
ரிலையன்ஸ் குழுமம் லீக் கிரிக்கெட் அணிகளையும் வைத்திருக்கிறது. இந்நிறுவனம் ஐஎஸ்எல் (ISL) கால்பந்து லீக் போட்டியையும் தொகுத்து வழங்குகிறது.