எலோன் மஸ்க் - ட்ரம்ப் கூட்டணியால் முகேஷ் அம்பானியின் மிகப்பெரிய நிறுவனத்திற்கு சிக்கல்
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவாகியுள்ள நிலையில், அவரது தீவிர ஆதரவாளரான எலோன் மஸ்க் இந்தியாவில் இணைய சேவை நிறுவனத்தைத் தொடங்கும் தனது திட்டத்தை மீண்டும் முன்னெடுக்கலாம் என்றே கூறப்படுகிறது.
இந்தியாவில் Starlink திட்டம்
இந்தியாவின் பரந்து விரிந்த கிராமப்புறங்களுக்கு எலோன் மஸ்க் தமது Starlink என்ற புரட்சிகரமான தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த வாய்ப்பிருப்பதாக ஊகங்கள் அதிகரித்து வருகின்றன.
டொனால்டு ட்ரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்றால், அவரது அழுத்தத்தின் காரணமாக இந்தியாவில் Starlink திட்டம் செயலுக்கு வரும் என்றே கூறப்படுகிறது. இந்தியாவில் அமுலில் இருக்கும் ஒழுங்குமுறை தடைகள் கடந்த 2021 முதல் Starlink திட்டத்தை தாமதப்படுத்தி வருகிறது.
ஆனால் இந்தியாவின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கொள்கையில் சமீபத்திய மாற்றங்கள் புதிய வாய்ப்புகளை வழங்கக்கூடும். இந்த நிலையில், தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சமீபத்தில் நிர்வாக ரீதியாக செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கும் திட்டத்தை அறிவித்தார், இந்த மாற்றத்தை மஸ்க் வரவேற்றார்.
அத்துடன், ஸ்டார்லிங்க் மூலம் இந்திய மக்களுக்கு சேவை செய்வதில் தனது உறுதிப்பாட்டை அவர் வெளிப்படுத்தியுள்ளார். 2019ல் தொடங்கப்பட்டதிலிருந்து, ஸ்டார்லிங்க் உலகளவில் 4 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைப் பெற்றுள்ளது, மேலும் இந்தியாவில் அதன் நுழைவு டிஜிட்டல் பிரிவைக் கணிசமாகக் குறைக்கும் என்றே நம்பப்படுகிறது.
அதிக சிக்கலின்றி எளிதாகும்
ஆனால் ஸ்டார்லிங்க் இந்தியாவில் நுழைவதால் முகேஷ் அம்பானியின் ஜியோ மற்றும் சுனில் பார்தி மிட்டலின் ஏர்டெல் போன்ற உள்ளூர் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வலுவான போட்டியை ஏற்படுத்தக்கூடும்.
மேலும், நியாயமான போட்டியை உறுதி செய்ய செயற்கைக்கோள் அலைக்கற்றை ஏலம் விடப்பட வேண்டும் என்று இந்த நிறுவனங்கள் வாதிடுகின்றன. தற்போது டொனால்டு ட்ரம்ப் தேர்தலில் வென்றுள்ளதால், எலோன் மஸ்கின் இந்திய நுழைவு அதிக சிக்கலின்றி எளிதாகும் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |