இரண்டாக பிரிந்த அம்பானி குடும்பம்! கடும் உழைப்பால் தம்பியை முந்தி உச்சம் தொட்ட முகேஷ் அம்பானி
முகேஷ் திருபாய் அம்பானி! ஆசியாவின் நம்பர் 1 கோடீஸ்வரரான இவர் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார்.
முகேஷ் அம்பானியின் தற்போதைய சொத்து மதிப்பு $92 பில்லியன் ஆகும் (போர்ப்ஸ் பத்திரிக்கை). உலகளவில் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 11வது இடத்தில் உள்ளார்.
இளம் வயதிலேயே தன்னுடைய தந்தையுடன் வணிகத்தில் ஈடுபட்ட அவர், மிக விரைவில் ஒரு தொழிலதிபராக வளர்ச்சிப் பெற்றார். ‘இந்திய வர்த்தக உலக ஜாம்பவான்’ எனப் போற்றப்படும் ‘திருபாய் அம்பானியின்’ மகன் ஆவார். ‘ரிலையன்ஸ்’ என்கிற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியதில் முகேஷின் பங்களிப்பு முக்கியமானது.
தன்னுடைய ஆரம்பக் கல்வியை மும்பையுள்ள அபே மொரிச்சா பள்ளியில் தொடங்கி இவர், பின்னர் மும்பை பல்கலைக்கழகத்தில் இரசாயன பொறியியல் துறையில் பி.இ பட்டம் பெற்றார். அதன் பிறகு, இரண்டு ஆண்டு எம்.பி.ஏ படிக்க அமெரிக்கா பயணமான முகேஷ் அவர்கள், கலிஃபோர்னியாவில் உள்ள இஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார்.
ஆனால் ஒரு ஆண்டு மட்டுமே நிறைவடைந்த நிலையில் 1980 -இல் தன்னுடைய படிப்பைக் கைவிட்டு இந்தியா திரும்பினார். அப்பொழுது இவருடைய தந்தை திருபாய் அம்பானி அவர்கள், பாலிஸ்டர் இழை நூல் உற்பத்தி செய்யும் ஆலை அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
மேலும், இவருடன் டாட்டா, பிர்லா என இந்தியாவில் 40-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் விண்ணப்பித்திருந்தனர். இப்படிப்பட்ட கடுமையான போட்டிக்கு மத்தியில் இவருடைய தந்தை திருபாய் அம்பானிக்கு அந்த உரிமம் வழங்கப்பட்டது.
இதனால், தந்தையின் பொறுப்புகள் அதிகமானதால், தன்னுடைய எம்.பி.ஏ படிப்பை ஓராண்டோடு முடித்துக்கொண்டு, தந்தைக்கு உதவியாக ரிலையன்சின் ஒருங்கிணைந்த நெசவு தொழிலிருந்து பாலிஸ்டர் இழைகள் உற்பத்தி மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையின் பொறுப்புகளை ஏற்றார்.
ரிலையன்ஸ் நிறுவனம் வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில் ஏற்பட்ட இடைஞ்சல்கள், அரசியல் சவால்கள் எனப் பல தடைகளை சமாளித்து தன்னுடைய தந்தைக்கு பக்கபலமாக இருந்த இவர், தந்தை திருபாய் அம்பானியின் இறப்பிற்குப் பிறகு, ரிலையன்ஸ் நிறுவனத்தை முகேஷ் அம்பானிதான் ஆளப்போகிறவர் என்று அனைவரும் நினைத்திருந்த தருணத்தில், அவருடைய சகோதரர் அனில் அம்பானியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவருடைய குடும்பம் இரண்டாகப் பிரிந்தது.
இதனால், அம்பானியின் குடும்பச் சொத்துக்கள் இரண்டாக பிரிக்கப்பட்டது. அதன்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மற்றும் பெட்ரோகெமிக்கஸ் நிறுவனம் முகேஷிடமும், ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் எனர்ஜி மற்றும் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் ஆகிய நிறுவனங்கள் அனில் அம்பானியிடமும் பிரித்துக்கொடுக்கப்பட்டது.
கடந்த 2006ஆம் ஆண்டு வரை அனில் அம்பானியின் சொத்து மதிப்பு முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பை விட அதிகமாகவே இருந்தது. ஆனால் தனது அயராத உழைப்பால் தொழிலில் உச்சம் தொட்ட முகேஷ் அம்பானி கடந்த 2007ஆம் ஆண்டு தம்பியை முந்தினார்.
முகேஷ் அம்பானி அவர்கள், நீதா அம்பானி என்ற பெண்மணியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இஷா என்ற மகளும், ஆனந்த் மற்றும் ஆகாஷ் என்ற மகன்களும் உள்ளனர்.