முகேஷ் அம்பானி வாங்கிக்குவித்திருக்கும் கடன்... வாயைப் பிளக்கவைக்கும் தொகை
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடும் கடனில் சிக்கியுள்ளது. இருப்பினும், அந்த நிறுவனம் வலுவான லாபத்தை ஈட்டி வருவதுடன், அதன் வணிகங்களை விரிவுபடுத்த தீவிரமாக முதலீடு செய்தும் வருகிறது.
விரிவுபடுத்தும் நோக்கில்
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 2024-25 நிதியாண்டுக்கான தனது வருடாந்திர அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின் அடிப்படையில் 2024 நிதியாண்டில், நிறுவனத்தின் மொத்த கடன் சுமார் ரூ.3.47 லட்சம் கோடி என்றும் நிகர கடன் ரூ.1.17 லட்சம் கோடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அந்த நிறுவனத்தின் நொத்த கடன் ரூ 3.24 லட்சம் கோடி என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பெரும் ஆதாயம் ஈட்டி வந்த போதும் அதன் கடன் சுமை மிக அதிகம் என்றே தெரிய வருகிறது.
தங்கள் நிறுவனங்களை விரிவுபடுத்தும் நோக்கில் நிர்வாகம் அதிகமாக கடனை வாங்கிக் குவித்துள்ளது. வலுவான நிதி நிலையைப் பேணும் நிலையில், வர்த்தகத்தை வளர்க்க பெரிய முதலீடுகளைச் செய்து வருவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
2025 நிதியாண்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.131,107 கோடி மூலதனச் செலவைச் செய்துள்ளது. முந்தைய 2023-24 நிதியாண்டில், இது ரூ.131,769 கோடியாக இருந்தது.
சிறந்த லாபம்
ஆண்டு அறிக்கையின்படி, 2025 நிதியாண்டின் முதலீடுகளில் பெரும்பாலானவை புதிய O2C திட்டங்களை வலுப்படுத்தும் வகையில் இருக்கும் என்றே தெரிய வருகிறது. O2C என்பது எண்ணெய் முதல் ரசாயனம் என்ற திட்டமாகும்.
அதாவது கச்சா எண்ணெயை ரசாயனமாக மாற்றுவதாகும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் வருவாய் ரூ.557,163 கோடியாக இருந்தது, இது முந்தைய ஆண்டின் வருவாய் ரூ.574,956 கோடியுடன் ஒப்பிடும்போது 3.1% குறைவு.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சந்தை எதிர்பார்ப்புகளை விட சிறந்த லாபத்தை ஈட்டியுள்ளது. இருப்பினும் கடந்த 30 நாட்களில் மட்டும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 7 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவடைந்துள்ளது.
இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான விதிகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருப்பது ரிலையன்ஸ் பங்குகள் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |