உலக கோடீஸ்வரர்கள் டாப்-10 பட்டியலில் மீண்டும் முகேஷ் அம்பானி! சரிவை சந்தித்த அதானி
உலகின் டாப்-10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் மீண்டும் முகேஷ் அம்பானி முன்னேறியுள்ளார்.
உலகின் டாப்-10 கோடீஸ்வரர்கள்
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) தலைவர் முகேஷ் அம்பானியின் நிகர மதிப்பு இன்று அதிகரித்துள்ளதால், உலகின் முதல் 10 பில்லியனர்கள் பட்டியலில் மீண்டும் நுழைந்தார்.
மறுபுறம், கௌதம் அதானியின் நிறுவனங்களின் பங்குகள் கடந்த சில நாட்களாக நஷ்டத்தில் வர்த்தகமாகி வரும் நிலையில் இன்று (புதன்கிழமை) 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்துள்ளது.
RIL பங்கு விலை 1.97 சதவீதம் உயர்ந்து ரூ.2424 ஆக இருந்த நிலையில், அதானி குழும நிறுவனங்களின் சில பங்குகள் இன்று சிவப்பு நிறத்தில் வர்த்தகமாகி வருகிறது.
அதானி பங்குகள் லோயர் சர்க்யூட்களில் லாக் செய்யப்பட்டன
இன்று மதியம் 1 மணி நிலவரப்படி, அதானி கிரீன், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் அதானி டோட்டல் கேஸ் ஆகியவற்றின் பங்குகள் லோயர் சர்க்யூட்டில் லாக் செய்யப்பட்டன.
அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், ஏசிசி, அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் என்டிடிவி ஆகியவை பச்சை நிறத்தில் வர்த்தகம் செய்தாலும், அவை கௌதம் அதானியின் நிகர மதிப்பை மேம்படுத்தத் தவறிவிட்டன.
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் அம்பானி, அதானி
தற்போது, 85.4 பில்லியன் அமெரிக்க டொலர் நிகர மதிப்புடன், அம்பானி இந்தியாவின் பணக்காரர் மட்டுமல்ல, உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் உள்ள பில்லியனர்களில் ஒருவராகவும் உள்ளார்.
மறுபுறம், அதானி 52.5 பில்லியன் டொலர் நிகர மதிப்புடன் பட்டியலில் 23-வது இடத்தில் உள்ளார். அதானி குழுமத்திற்கு எதிராக ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கை வெளியிட்ட பிறகு அவரது நிகர மதிப்பு குறைந்தது.
ஜனவரி 24 அன்று 119 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த அவரது நிகர மதிப்பு இப்போது 52.5 பில்லியன் டொலராக குறைந்துள்ளது.