ரோஹித், திலக் வர்மா அபாரம்... டெல்லியை வீழ்த்தி மும்பை அணி திரில் வெற்றி
கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் திலக் வர்மா அதிரடி ஆட்டத்தால் டெல்லியை வீழ்த்தி மும்பை அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.
அக்சர் படேல் 25 பந்துகளில் 54 ஓட்டங்கள்
டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் 16-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது. நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
இதனையடுத்து டெல்லி அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது. தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். பிரித்வி ஷா 15 ஓட்டங்களில் வெளியேறினார். பின்னர் வார்னர், மனிஷ் பாண்டே இணைந்து சிறப்பாக விளையாடினர்.
பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய மனிஷ் பாண்டே 26 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த யாஷ் துல்(2),ரோவேமென் பவெல்(4), லலித் யாதவ்(2) ஓட்டங்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
விக்கெட்டுகளை இழந்தாலும் மறுபுறம் நிலைத்து ஆடிய வார்னர் அரைசதம் அடித்தார். தொடர்ந்து அக்சர் படேல் அதிரடி காட்டினார். பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்ட அவர் 25 பந்துகளில் 54 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
இறுதியில் 19.4 ஓவர்கள் முடிவில் 10விக்கெட் இழப்பிற்கு டெல்லி அணி 172 ஓட்டங்கள் எடுத்தது. டேவிட் வார்னர் 47 பந்துகளில் 51 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
தொடர்ந்து 173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் , ரோஹித் ஷர்மா களமிறங்கினர். இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ரோஹித் ஷர்மா 45 பந்துகளில் 65 ஓட்டங்கள்
அதிரடியாக விளையாடிய இவர்கள் நல்ல தொடக்கம் கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 71 ஆக இருந்த போது இஷான் கிஷன் 31 ஓட்டங்களுக்கு ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த திலக் வர்மா அதிரடி காட்டினார்.
மறுபுறம் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா அரைசதம் அடித்தார். தொடர்ந்து திலக் வர்மா 41 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆனார்.
தொடர்ந்து ரோஹித் ஷர்மா 65 ஓட்டங்களில் வெளியேறினார். கடைசி 3 ஓவரில் 26 ஓட்டங்கள் தேவைப்பட்டது. டிம் டேவிட், கேமரூன் கிரீன் இருவரும் பவுண்டரி, சிக்ஸர் பறக்க விட்டனர்.
கடைசி ஓவரில் 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது. டெல்லி அணியின் நோர்ஜே வீசிய அந்த ஓவரில் கடைசி பந்தில் 2 ஓட்டங்கள் எடுத்து மும்பை அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.