தட்டுத்தடுமாறி முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை அணி
மும்பையில் நடைபெற்ற 44-வது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
நாணய சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது. இதனையடுத்து ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லரும் தேவ்தத் படிக்கலும் களமிறங்கினர்.
தேவ்தத் படிக்கல் 15 பந்துகளை எதிர்கொண்டு 15 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் சஞ்சு சாம்சன் 16 ஓட்டங்களுடனும், மிட்செல் 17 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஜோஸ் பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதமடித்தார். 16-வது ஓவரின் முதல் 4 பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்ட அவர் 67 ஓட்டங்களில் ஷோகீன் பந்தில் ஆட்டமிழந்தார்.
அதிரடியாக ஆடிய அஸ்வின் 9 பந்தில் 21 ஓட்டங்கள் சேர்த்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்கள் எடுத்தது.
இதையடுத்து 159 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவருடன் தொடக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் 18 பந்துகளில் 26 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய சூரியகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 39 பந்துகளில் 51 ஓட்டங்கள் அடித்து சாகல் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். விக்கெடுக்கள் சீரான இடைவெளியில் சரிய, நிதானமாக விளையாடி வந்த திலக் வர்மா 30 பந்துகளில் 35 ஓட்டங்கள் சேர்த்தார்.
இக்கட்டான சூழலில் களமிறங்கிய பொல்லார்டு 14 பந்துகளில் 10 ஓட்டங்கள் சேர்த்து ஏமாற்றமளித்தார். இறுதியில் வெற்றிக்கு தேவையான 5 ஓட்டங்களை டானியேல் சாம்ஸ் சிக்ஸர் பறக்கவிட்டு, மும்பை அணியை வெற்றிக்கு இட்டுச்சென்றார். இதனையடுத்து 5 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்களை குவித்து மும்பை அணி வெற்றி பெற்றது.