லக்னோ அணியை தெறிக்கவிட்ட மும்பை இந்தியன்ஸ்: ஆகாஷ் மத்வால் அபாரம்
சென்னையில் நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோ அணிக்கு எதிராக மும்பை அணி 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று குஜராத் அணியுடன் குவாலிபையர் 2ல் ஆட உள்ளது.
கேமரூர் கிரீன் அதிரடி
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன், குருணால் பாண்ட்யா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மோதியது.
நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா துடுப்பாட்டம் தெரிவு செய்தார். மும்பை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய இஷான் கிஷன்(15), ரோகித் சர்மா(11) ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.
அடுத்து வந்த கேமரூர் கிரீன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி (6 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) 23 பந்துகளில் 41 ஓட்டங்கள் சேர்த்தார். அரை சதத்தை நோக்கி முன்னேறிய அவர் நவீன் உல்-ஹக் வீசிய பந்தில் போல்ட் ஆனார்.
நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 33 ஓட்டங்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். திலக் வர்மா 26 ஓட்டங்களிலும், டிம் டேவிட் 13 ஓட்டங்களிலும் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தனர்.
அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்
அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில், மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்கள் குவித்தது. இதையடுத்து 183 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு துவக்கமே ஏமாற்றமாக அமைந்தது.
கைல் மேயர்ஸ்(18), மான்கட்(3), க்ருணால்(8) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஸ்டானிஸ் மட்டும் அதிரடி காட்டினார். 27 பந்துகளை சந்தித்த அவர் 40 ஓட்டங்கள் குவித்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பதோனி, பூரான், தீபக் ஹூடா, கவுதம் ஆகியோர் தடுமாற இறுதியில் இறுதியில் 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்களில் லக்னோ அணி ஆட்டமிழந்தது.
இதனையடுத்து 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றிபெற்றது. அடுத்து குஜராத் அணியுடன் குவாலிபையர் 2ல் ஆட உள்ளது.
மும்பை அணியில் 3.3 ஓவர்கள் பந்து வீசிய ஆகாஷ் மத்வால் வெறும் 5 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.