பெங்களூரு பந்துவீச்சை மொத்தமாக நொறுக்கிய சூர்யகுமார், இஷான்: மிரள வைத்த மும்பை
25-வது லீக் ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றது.
அரைசதமடித்த டு பிளிஸ்சிஸ்
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 25-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுடன் மோதியது. நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
இதனையடுத்து முதலில் துடுப்பாட்டத்தில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரரான விராட் கோஹ்லி 3 ஓட்டங்களிலும், அடுத்ததாக களமிரங்கிய அறிமுக வீரர் வில் ஜேக்ஸ் 8 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த படிதார் - டு பிளிஸ்சிஸ் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை முன்னெடுத்து சென்றனர். படிதார் அரை சதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடி அரைசதமடித்த டு பிளிஸ்சிஸ் 61 ஓட்டங்களில் வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டி 23 பந்துகளில் 53 ஓட்டங்கள் குவித்தார். இறுதியில் பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்கள் எடுத்தது. மும்பை அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
69 ஓட்டங்கள் குவித்த இஷான் கிஷன்
இதனையடுத்து 197 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி சார்பில் இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய இந்த ஜோடியில், 34 பந்துகளில் 69 ஓட்டங்கள் குவித்த இஷான் கிஷன் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து ரோகித் சர்மாவுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் தொடர்ந்து அதிரடி காட்டிய ரோகித் சர்மா 38 (24) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
சூர்யகுமாருடன் அடுத்து ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் வாணவேடிக்கை காட்டிய சூர்யகுமார் யாதவ் 17 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார். ஆனால் 19 பந்துகளை எதிர்கொண்ட அவர் மொத்தம் 52 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ஹர்திக் பாண்ட்யாவுடன் இணைந்த திலக் வர்மா ஜோடி வெற்றிக்கான இலக்கை எட்டினார்கள். துடுப்பாட்டத்தில் மிரட்டிய மும்பை அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்கள் எடுத்தது. இதன் மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |