ஐபிஎல் தொடரில் ஒரு ரன் அடித்த வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம் - ரசிகர்கள் வியப்பு
ஐபிஎல் தொடரில் மும்பை அணி ஏலத்தில் எடுத்த வீரரைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்காக லக்னோ, குஜராத் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 10 அணிகளுக்கான வீரர்களின் மெகா ஏலம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடந்து முடிந்துள்ளது. அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை கடும் போட்டிக்கு மத்தியிலும் தேர்வு செய்து கொண்டனர்.
இந்த ஏலத்தில் அதிகப்பட்சமாக மும்பை அணியால் இஷான் கிஷான் ரூ.15.25 கோடிக்கும், சென்னை அணி தீபக் சாஹரை ரூ.14 கோடிக்கும் விலை போயினர். அதேசமயம் சுரேஷ் ரெய்னா, ஷகிப் அல் ஹசன், ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் ஏலம் எடுக்கவில்லை என்ற செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.
இதனிடையே மும்பை அணி அதிக அனுபவம் இல்லாத ஒரு வீரரை ரூ.8.25 கோடிக்கு ஏலம் எடுத்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சிங்கப்பூர் அணியைச் சேர்ந்த இளம் வீரர் டிம் டேவிட் அந்நாட்டு அணிக்காக சர்வதேச டி 20 போட்டிகளில் விளையாடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்து சமீபத்தில் ஆஸ்திரேலிய நாட்டிற்கு குடி பெயர்ந்த டிம் டேவிட் பிக்பேஷ் டி 20 லீக் தொடரில் ஆடி அனைவரது கவனத்தையும் பெற்றிருந்தார். மேலும் கடந்த சீசனில் பெங்களூரு அணிக்காக விளையாடிய அவர் ஒரே ஒரு போட்டியில் களமிறங்கி ஒரு ரன் மட்டும் அடித்து டிம் அவுட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது.