ஐபிஎல் 2021 ஏலம்... இந்த மூன்று வீரர்களை குறி வைக்கும் மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் ஏலத்தில், மும்பை இந்தியன்ஸ் முக்கியமாக மூன்று வீரர்களை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என்று குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 14-வது ஐபிஎல் தொடருக்கான ஏலம் இந்த மாதத்தில் நடைபெறவுள்ளது. ஆனால் அதற்கான திகதி குறித்து இன்னும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிப்பும் இல்லை.
ஆனால், அதற்குள் அனைத்து அணிகளுமே, தங்களுக்கு தேவையான வீரர்கள் யார் என்பது குறித்து முடிவு செய்துவிட்டதாகவும், அதில் மும்பை இந்தியன்ஸ் குறிப்பாக இந்த மூன்று முக்கிய வீரர்களை எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில் ஒருவரின் பெயர் விஷ்ணு சோலங்கி, இவர் முஷ்டாக் அலி போட்டியில் பரோடா அணிக்காக விளையாடிய இவர், ஹரியானாவுக்கு எதிரான போட்டியில் அருமையாக விளையாடி 71 ஓட்டங்கள் குவித்ததுடன், கடைசி மூன்று பந்தில் 6,4 மற்றும் 6 என அடித்து எதிர்பாராத வெற்றியை அந்த அணிக்கு வாங்கித்தந்தார்.
கடைசி கட்டத்தில் எப்போதும் அதிரடியை வெளிப்படுத்துவதால், விஷ்ணு சோலங்கி மீது மும்பை அணி குறி வைத்துள்ளது.
இரண்டாவது வீரராக ஜலஜ் சக்சேனா, மும்பை அணிக்கு ஏற்கனவே ராகுல் சஹார் என்ற சிறப்பான சுழற்பந்து வீச்சாளர் இருந்தாலும், இன்னும் ஒரு நல்ல சுழற்பந்து வீச்சாளர் தேவை என்பதால், ஜலஜ் சக்சேனாவை எடுக்க மும்பை இந்தியன்ஸ் அணி முடிவு செய்துள்ளது.
இவர் முஷ்தாக் அலி போட்டியில் இவர் 5 போட்டிகளில் பங்கேற்று 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக செயல்பட்டார்.
மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறை பல வெளிநாட்டு வீரர்களை வெளியேற்றியுள்ளதால், அதற்கு பதிலாக, இந்த முறை அவுஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளரான பில்லி ஸ்டன்லேக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.
இவர் கடந்தாண்டு ஹைதராபாத் அணிக்காக விளையாடிய நிலையில், தற்போது அந்த அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


