மொத்தமாக தடுமாறிய மும்பை... இறுதிப் போட்டிக்கு மீண்டும் தகுதி பெற்ற குஜராத் அணி
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 2வது தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது.
சுப்மன் கில் 49 பந்தில் சதம்
நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக விருத்திமான் சஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.
இதில் சஹா 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து சாய் சுதர்சன் களமிறங்கினார். மறுபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கில், மத்வால், சாவ்லா பந்துவீச்சில் சிக்சர்களை அடித்து நொறுக்கினார்.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் 49 பந்தில் சதம் அடித்து அசத்தினார். இந்த தொடரில் அவரது 3வது சதம் இதுவாகும். சதம் அடித்த பின்னரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில்லால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
3 விக்கெட் இழப்புக்கு 233 ஓட்டங்கள்
மறுபுறம் சாய் சுதர்சனும் தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி மும்பை பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். சுப்மன் கில் 60 பந்தில் 129 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து பாண்ட்யா களம் இறங்கினார். இறுதியில் குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 233 ஓட்டங்கள் குவித்தது.
இதையடுத்து 234 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. அணித்தலைவர் ரோகித் சர்மா(8), நேஹல் வதேரா(4) கிரீன்(30) சூரிய குமார் யாதவ்(61) திலக் வர்மா(43) என வரிசையாக ஆட்டமிழக்க, எஞ்சிய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் தடுமாறி விக்கெட்டை இழந்தனர்.
இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மும்பை அணி 171 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து குஜராத் அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது.