80 வயது நபருக்கு வந்த முகநூல் ஆசை: 9 கோடி ரூபாயை இழந்ததால் அதிர்ச்சி
80 வயது நபர் ஒருவருக்கு முகநூலில் நான்கு பெண் தோழிகள் கிடைத்தார்கள். அந்த ‘தோழிகளிடம்’ 9 கோடி ரூபாயை இழந்த அதிர்ச்சியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவர்!
முகநூலில் கிடைத்த நான்கு பெண் தோழிகள்
இந்தியாவின் மும்பையில் வாழும் 80 வயது முதியவர் ஒருவருக்கு ஷார்வி என்னும் பெண் முகநூலில் அறிமுகமானார்.
பின்னர், அவருக்கு, கவிதா, டினாஸ் மற்றும் ஜாஸ்மின் என்னும் பெண்களும் தோழிகளாகியுள்ளார்கள்.
ஷார்வி, தான் கணவரைப் பிரிந்தவர் என்றும், பிள்ளைகளின் மருத்துவச் செலவுக்கு பணம் தேவை என்றும் கேட்க, அவருக்கு பணம் அனுப்பியுள்ளார் அந்த முதியவர்.
அதேபோல, பல்வேறு காரணங்கள் கூறி நான்கு பெண்களுமே அந்த முதியவரிடம் பணம் வாங்கிவந்துள்ளார்கள்.
ஒரு கட்டத்தில், ஷார்வி இறந்துபோனதாகவும், அவரது மருத்துவமனை பில்லைக் கட்ட பணம் வேண்டும் என்றும் டினாஸ் அந்த முதியவரிடம் கேட்டதாகவும், பணம் கொடுக்கவில்லையென்றால் தன் உயிரை மாய்த்துக்கொள்வதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
தன் சேமிப்பிலிருந்த 8.7 கோடி ரூபாயை செலவு செய்தும், தொடர்ந்து அந்த பெண்கள் பணம் கேட்கவே, தன் மகன் மற்றும் மருமகளிடம் கடன் வாங்கியுள்ளார் அந்த முதியவர்.
தந்தை இப்படி எக்கச்சக்கமாக செலவு செய்வதைக் கவனித்த அவரது மகனுக்கு சந்தேகம் ஏற்பட, என்ன நடக்கிறது என விசாரிக்கத் துவங்கிய அவருக்கு, தன் தந்தை சைபர் மோசடி ஒன்றில் சிக்கியுள்ளது தெரியவந்துள்ளது.
தான் ஏமாற்றப்பட்டதை தாமதமாக உணர்ந்துகொண்ட அந்த முதியவருக்கு ஏற்பட்ட கடும் அதிர்ச்சி அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளது.
பின்னர் அவர் டிமென்ஷியா பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அந்த முதியவரை ஏமாற்றியது ஒரே பெண்தான் என பொலிசார் சந்தேகிக்கும் நிலையில், அந்த மோசடி தொடர்பில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |