மிரட்டிய பும்ரா, கோட்சி... பஞ்சாப் அணியை நொறுக்கிய மும்பை
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை அணி திரில் வெற்றிபெற்றது.
53 பந்துகளில் 78 ஓட்டங்கள்
சண்டிகாரில் நடைபெற்ற 33-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி துடுப்பாட்டத்தில் களமிறங்கியது. அணியின் தொடக்க வீரர்களாக களம் கண்ட ரோகித் மற்றும் இஷான் ஜோடியில், இஷான் 8 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ரோகித் சர்மாவுடன் இணைந்த சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
நிதானமாக விளையாடிவந்த ரோகித் சர்மா, 25 பந்துகளில் 36 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த சூர்யகுமார் யாதவ் அரைசதமடித்து அசத்தினார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 53 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 78 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஹர்திக் (10), டிம் டேவிட் (14), சைபர்ட் (1) ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில், திலக் வர்மா அதிரடி காட்ட, மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ஓட்டங்கள் எடுத்தது.
28 பந்துகளில் 61 ஓட்டங்கள்
இதனையடுத்து 193 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் சார்பில் சாம் கரண் மற்றும் பரப்சிம்ரன் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இதில், பரப்சிம்ரன் சிங் (0), ரூசோவ் (1), சாம் கரண் (6), லிவிங்ஸ்டோன் (1), ஹர்பிரித் சிங் பாட்டியா (13), ஜிதேஷ் சர்மா (9) ஓட்டங்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
மறுமுனையில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷஷாங் சிங் 41 ஓட்டங்களில் கேட்ச் ஆனார். இதனையடுத்து அசுடோஷ் சர்மாவுடன், ஹர்பிரித் பிரார் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் அதிரடியாக ஓட்டங்கள் சேர்த்த அசுடோஷ் சர்மா 23 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 28 பந்துகளில் 7 சிக்சர்கள், 2 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முடிவில் பஞ்சாப் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை அணி திரில் வெற்றிபெற்றது. மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா மற்றும் கோட்சி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஆகாஷ் மேத்வால், கோபால் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |