சமையல் எண்ணெய் தட்டுப்பாடு: பண்டமாற்று முறைக்கு திரும்பிய ஜேர்மானிய நகரம்
ஐரோப்பாவில் சமையல் எண்ணெய் தட்டுப்பாடு அதிகரித்துவரும் நிலையில், முனிச் நகர மதுபான விடுதி ஒன்று பண்டமாற்று முறைக்கு திரும்பியுள்ளது.
முனிச் நகர மதுபான விடுதி ஒன்று, வாடிக்கையாளர்கள் அருந்தும் பீருக்கு கட்டணமாக சமையல் எண்ணெய் செலுத்த கோரியுள்ளது. உலக நாடுகள் பயன்படுத்தும் சூரியகாந்தி எண்ணெயில் 80% உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பிப்ரவரியில் ரஷ்யா அதன் அண்டை நாடான உக்ரைன் மீது படையெடுப்பை முன்னெடுத்ததில் இருந்து ஜேர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகள் சமையல் எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பற்றாக்குறையால் தத்தளித்து வருகிறது.
இந்த நிலையிலேயே முனிச் நகர மதுபான விடுதி ஒன்று பண்டமாற்று முறைக்கு திரும்பும் வித்தியாசமான முடிவுக்கு வந்தது. அதன்படி, ஒரு லிற்றர் சூரியகாந்தி எண்ணெய்க்கு பதிலாக பீர் பிரியர்களுக்கு தங்களுக்கு பிடித்த அதே அளவு பீர் வழங்குகிறது.
சமையல் எண்ணெய் கையிருப்பு மொத்தமாக காலியான நிலையிலேயே இந்த முடிவுக்கு வந்ததாக அந்த மதுபான விடுதி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின்னர் சூரியகாந்தி எண்ணெய் பற்றாக்குறை மிக அதிகமாக காணப்படுகிறது.
நாட்டின் பல அங்காடிகளும் வணிக வளாகங்களும் வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் போத்தல்களில் கட்டுப்பாடு விதித்தது. வாரத்திற்கு 30 லிற்றர் எண்ணெய் தேவைப்படும் என்ற நிலையில் 15 லிற்றர் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றால் உணவு தயாரிக்க முடியாமல் போகும் என தெரிவித்துள்ளார் மதுபான விடுதி மேலாளர்.
பண்டமாற்று முறை அறிமுகம் செய்த பின்னர் இதுவரை 400 லிற்றர் எண்ணெய் வாடிக்கையாளர்களால் மாற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜேர்மன் மதுபான விடுதிகளில் ஒரு லிற்றர் பீர் 7 யூரோவிற்கு விற்கப்படுகிறது.
ஆனால் ஒரு லிற்றர் சூரியகாந்தி எண்ணெய் 4.5 யூரோ மட்டுமே. இதுவே வாடிக்கையாளர்களை அதிகம் தூண்டியிருக்கலாம் எனவும் கூறப்படுகிக்றது.
உக்ரைனுக்கு மனிதாபிமான நடவடிக்கை காரணமாக சென்ற ஒருவர் அங்கிருந்து 80 லிற்றர் சூரியகாந்தி எண்ணெய் வாங்கி வந்த நிலையில், அதை மொத்தமாக தமது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான பீர் வாங்க அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.