ரோஹித் சர்மா, கோலியை முந்திய தமிழக வீரர்! பாராட்ட மனசே வராதா என ஆதங்கம்
மும்பையை சேர்ந்த சில முன்னாள் வீரர்கள் ஒருபோதும் தென்னிந்திய வீரர்களைப் பாராட்டுவதில்லை என தமிழக வீரர் முரளி விஜய் ஆதங்கப்பட்டுள்ளார்.
முரளி விஜய்
அவுஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இன்றைய தொலைக்காட்சி வர்ணனையில் சொந்த மண்ணில் (இந்திய மண்ணில்) விளையாடிய டெஸ்டுகளில் அரை சதத்தைச் சதமாக மாற்றுவது குறித்த புள்ளிவிவரம் வெளியிடப்பட்டது.
அதில் முதல் இடத்தில் இருந்தார் முரளி விஜய். ரோஹித் சர்மா, கோலி ஆகியோர் அவருக்குப் பின்னால் இருந்தார்கள். இந்தப் புள்ளிவிவரத்தைப் பார்த்து வர்ணனையில் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆச்சர்யமடைந்தார்.
BCCI-AFP
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பதில்
இது குறித்து முரளி விஜய் டுவிட்டரில், ஆச்சர்யமா உங்களுக்கு? மும்பையைச் சேர்ந்த சில முன்னாள் வீரர்கள் ஒருபோதும் தென்னிந்திய வீரர்களைப் பாராட்டுவதில்லை என்றார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறுகையில், அரை சதத்தைச் சதமாக மாற்றுவதில் ரோஹித் சர்மா தற்போது 2-வது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் முரளி விஜய் இருப்பது நல்ல விஷயம்.
அவரைப் போன்றவர்கள் செய்த பங்களிப்பை நாம் மறந்து விடுகிறோம். 12 சதங்கள், அதில் 9 சதங்கள் சொந்த மண்ணில் எடுக்கப்பட்டவை. அபாரமாக விளையாடி இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் என தெரிவித்துள்ளார்.
Some Mumbai ex players can never be appreciative of the south ! #showsomelove #equality #fairplayforall @sanjaymanjrekar@BCCI
— Murali Vijay (@mvj888) February 10, 2023