வங்கக்கடலில் உருவானது முரசு புயல் .., தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்?
Murasu cyclone forms in bay of bengal- தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் இன்று (நவ.1) காலை 11.30 மணிக்கு முரசு புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
அந்தமான் நிகோபார் பகுதிகளில் சில நாட்களுக்கு முன்பு வளிமண்டல சுழற்சி உருவானது. இது படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது.
பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது.
தொடர்ந்து தீவிரமடைந்த நிலையில், இன்று காலை புயலாக உருவெடுத்துள்ளது. இந்தப் புயலுக்கு இந்தியா பரிந்துரைத்த முரசு என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தற்போது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்தப் புயல், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியான நெல்லூர் அருகே வரும் நவம்பர் 3ஆம் தேதி காலை கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
புயல் ஆந்திராவை நோக்கி நகர்வதால் தமிழகத்தில் பெரிய அளவில் மழைப்பொழிவு இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், முரசு புயல் அடுத்த சில மணி நேரங்களில் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மணிக்கு 23 கி.மீ. வேகத்தில் நகரும் இந்தப் புயல், நவம்பர் 3ஆம் தேதி கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |