அந்த விடயத்தை மறைக்கும்படி அஞ்சு கூறினார்... பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்தியப் பெண்ணின் தாய் பரபரப்பு தகவல்கள்
பிரித்தானியாவில் கேரளாவைச் சேர்ந்த செவிலியர் மற்றும் அவரது பிள்ளைகள் இருவர் கொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பாக அவரது தாயார் பரபரப்புத் தகவல்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.
மனைவியையும் பிள்ளைகளையும் கொடூரமாக கொலை செய்த கணவர்
இங்கிலாந்திலுள்ள Kettering என்ற இடத்தில் வாழ்ந்துவந்த செவிலியரான அஞ்சு அசோக் (40), அவரது பிள்ளைகளான ஜீவா சாஜு (6) மற்றும் ஜான்வி சாஜு (4) ஆகியோர் நேற்று முன்தினம் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.
பொலிசார் தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்றபோது அங்கு ஆடை முழுவதும் இரத்தத்துடன் காணப்பட்ட அஞ்சுவின் கணவரான சாஜுவை (52) கைது செய்தனர்.
அவரை பொலிசார் தற்போது தீவிர விசாரணைக்குட்படுத்திவருகின்றனர்.
அஞ்சுவின் தாய் வெளியிட்டுள்ள தகவல்
இந்நிலையில், அஞ்சுவின் தாய் சில பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். அதாவது, இதற்கு முன் அஞ்சுவும் அவரது கணவர் சாஜூவும் சவுதி அரேபியாவில் வாழ்ந்துவந்தார்கள்.
அப்போதே சாஜு அஞ்சுவை அடித்துக் கொடுமைப்படுத்திவந்ததாக அஞ்சுவின் தாய் கிருஷ்ணம்மா தெரிவித்துள்ளார். அஞ்சுவை உடையைப் பிடித்து இழுத்து சாஜு அடிப்பதைத் தான் பார்த்துள்ளதாகவும், இந்த விடயத்தைத் தன் தந்தையிடம் சொல்லவேண்டாம் என தன்னை அஞ்சு கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்த கிருஷ்ணம்மா, அத்துடன், தான் எக்காரணம் கொண்டும் தற்கொலை செய்துகொள்ளமாட்டேன் என அஞ்சு தனக்கு சத்தியம் செய்துகொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், என் மகள் சவுதியில் வாழும்போது அவளுடைய உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமோ என தான் பயந்துகொண்டே இருந்ததாகவும் தெரிவித்துள்ளார் கிருஷ்ணம்மா.
இதற்கிடையில், சாஜு தன் மனைவியையும் பிள்ளைகளையும் கொலை செய்த விடயம் கேரளாவில் வாழும் சாஜுவின் பெற்றோருக்கு இதுவரை தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
Photo: Special arrangement