கொலை வழக்கில் 34 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது
பாதுகாப்புத்துறை அதிகாரி கொலை வழக்கில் 34 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றவாளி கைது
சென்னை ஆவடியில் உள்ள டேங்க் குடியிருப்பில் வசித்து வந்தவர் ரஞ்சித் சிங் ராணா (52). இவர், அங்குள்ள பாதுகாப்பு துறை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு தனது இரண்டாவது மனைவியான மதுமதியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், கணவரை கொலை செய்ய வேண்டும் என்று சகோதரர் பாலாஜியுடன் இணைந்து மதுமதி திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்படி கடந்த 1991-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ம் திகதி அன்று மதுமதி மற்றும் பாலாஜி இணைந்து ரஞ்சித் சிங் ராணா மீது தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் மதுமதியை கைது செய்தனர். இதில், பாலாஜி மும்பைக்கு தப்பிச் சென்று தலைமறைவாகிவிட்டார்.
பின்னர், பொலிஸார் பலமுறை மும்பைக்கு சென்று தேடியும் பாலாஜியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், விருதுநகரில் பாலாஜி இருப்பது பொலிஸாருக்கு தெரியவரவே, தனிப்படை அமைத்து கடந்த திங்கள் கிழமை அவரை கைது செய்து ஆவடிக்கு கொண்டு வந்தனர்.
கொலை வழக்கில் 34 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பாலாஜியை பொலிஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இதனிடையே, இந்த வழக்கில் கைதான மதுமதியை 1998-ம் ஆண்டு அம்பத்தூர் நீதிமன்றம் விடுதலை செய்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |