இரத்த காயங்களுடன் சரணடைந்த நபர்... சடலமாக மீட்கப்பட்ட சுவிஸ் தாயார்
சூரிச் மாவட்டம் 9ல் சடலமாக மீட்கப்பட்ட தாயார் தொடர்பில், அவரது கணவரே பொலிசாரிடம் சரணடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சூரிச் Altstetten பகுதியில் புதன்கிழமை இரண்டு பிள்ளைகளுக்கு தாயாரான 30 வயது பெண்மணி ஒருவர் கணவராலையே கொடூரமாக தாக்கப்பட்டு மரணமடைந்தார்.
இந்த விவகாரத்தில், குறித்த பெண்மணியின் கணவரே ரத்த காயங்களுடன் சம்பவத்தன்று பொலிசாரிடம் சரணடைந்துள்ளார். 46 வயதான அந்த துருக்கிய நபர் ஓராண்டுக்கு முன்னர் தமது மனைவியிடம் இருந்து பிரிந்து சென்றுள்ளார்.
ஆனால் அடிக்கடி தமது மனைவியும் பிள்ளைகளும் வசித்து வந்துள்ள குடியிருப்பு வந்து சென்றுள்ளார். ஒவ்வொரு முறையும் வாக்குவாதத்துடனையே இவர்களின் சந்திப்பு முடிவுக்கு வந்துள்ளது.
பல முறை குறித்த பெண்மணி பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளதுடன், பொலிசார் அந்த நபரை எச்சரித்தும் அனுப்பியுள்ளனர். சம்பவம் நடந்த அன்றும், அந்த பகுதியில் அவர் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்ததுடன், தமது மனைவியை தொடர்பு கொள்ளவும் விலக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையிலேயே புதன்கிழமை குறித்த 30 வயது பெண்மணி குற்றுயிராக மீட்கப்பட்டு, பின்னர் சிறிது நேரத்திலேயே மரணமடைந்துள்ளார்.
தற்போது கைதாகியுள்ள அந்த துருக்கிய நபர் மீது, ஏற்கனவே மனைவியை தாக்கியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.