திருச்சி முகாமில் உள்ள இலங்கை தமிழர் முருகன் உயிருக்கு ஆபத்து.., நளினி உருக்கமான கடிதம்
திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள முருகன் உயிருக்கு ஆபத்து என்று நளினி கடிதம் எழுதியுள்ளார்.
திருச்சி முகாமில் அடைப்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி பின்னர் கடந்த 2022 நவம்பர் 11 -ம் திகதி உச்சநீதிமன்றத்தால் முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், சாந்தன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் இலங்கை தமிழர்கள் என்பதால் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் தங்களை காவல்துறை சுதந்திரமாக இருக்க விடுவதில்லை என்று போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், முருகன், ராபர்ட் பயஸ் ஆகியோர் தங்களை விடுவிக்க கோரி கால வரையற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் ராபர்ட் பயஸ் மயங்கி விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக வழக்கறிஞர் புகழேந்தி கூறினார்.
இந்த நிலையில் தான் முருகனின் மனைவி நளினி தமிழக அரசின் தலைமைச் செயலர், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகர பொலிஸ் கமிஷனர் காமினி ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
அவர் கடிதத்தில் கூறியிருப்பது
நளினி எழுதிய கடிதத்தில், "நானும் என் கணவர் முருகனும் கடந்த 2022 நவம்பர் 11 -ம் திகதி உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டோம். என் கணவர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் அவரை திருச்சி முகாமில் அடைத்துள்ளனர். அங்கு அவர் துன்பங்களை சந்தித்து வருகிறார்.
அவரை, இலங்கை தூதரகத்திற்கு அழைத்துச் சென்று பாஸ்போர்ட் விண்ணப்பிக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டாலும் காவல்துறை கட்டுப்பாட்டில் தான் உள்ளார். மேலும், அவரை நடைபயிற்சி செய்ய அனுமதிப்பதில்லை.
அவர் எந்த விளையாட்டையும் விளையாட அனுமதிப்பதில்லை. அவர் முன்பு இருந்த வேலூர் சிறையை விட இந்த முகாம் கொடுமையாக உள்ளது. முன்னதாக இந்த முகாமில் இருந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் உணவு மற்றும் மருத்துவ வசதி இல்லாமல் இறந்துவிட்டார்.
நான் என் கணவரை பார்த்த போது அவர் 15 கிலோ எடை குறைந்து காணப்பட்டார். இன்றுடன் என் கணவர் 12 நாட்கள் சாப்பிடாமல் ஆபத்தான நிலையில் உள்ளார்.
அவருக்கு முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்படாததால் அவரின் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படக்கூடும். எனவே இந்த கடிதத்தை பரிசீலனை செய்து என் கணவரின் உயிரை காப்பாற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |