இரும்புச்சத்தை அள்ளித்தரும் கிராமத்து ஸ்டைல் முருங்கைகீரை சாம்பார்: எப்படி செய்வது?
முருங்கை இலைகளை தினமும் சாப்பிட்டுவர, ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும்.
மேலும் பற்களின் உறுதி, நீளமான முடியின் வளர்ச்சி, நரை முடி, தோல் நோய், வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு முருங்கைக்கீரை நல்ல மருந்தாக அமைகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை என்று கூட சொல்லலாம்.
முருங்கைக்கீரையை பயன்படுத்தி கிராமத்து ஸ்டைல் முருங்கைக்கீரை சாம்பார் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- துவரம்பருப்பு- 1/4 கப்
- பூண்டு- 2
- பெருங்காயம்- சிறிதளவு
- சின்ன வெங்காயம்- 100g
- தக்காளி- 4
- காய்ந்த மிளகாய்- 2
- சாம்பார் தூள்- 2 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
- கடுகு- 1 ஸ்பூன்
- சீரகம்- 1/2 ஸ்பூன்
- வெந்தயம்- 1/4 ஸ்பூன்
- மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
- நெய்- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- முருங்கைக்கீரை- 2 கைப்பிடி
செய்முறை
முதலில் ஒரு குக்கரில் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள பருப்பு, பூண்டு மற்றும் பெருங்காயம் சேர்த்து 5 விசில் விட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலில் நெய் சேர்த்து கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கைக்கீரையை நன்கு வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, வெந்தயம், சீரகம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
தொடர்ந்து அதில் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும். பின் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி வதக்கிய பின் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் மற்றும் சாம்பார்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
அடுத்து அதில் வேகவைத்த பருப்பு சேர்த்து கொதித்த பின் வதக்கிய முருங்கை கீரை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால் ஆரோக்கியமான முருங்கை கீரை சாம்பார் ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |