புதிய அரசியல் கட்சியைத் தொடங்கிய எலோன் மஸ்க்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புடனான கடும் கருத்து மோதலை அடுத்து புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார் எலோன் மஸ்க்.
சுதந்திரத்தை திரும்பக் கொடுக்க
தமது சமூக ஊடகத்திலேயே, அமெரிக்கா கட்சி என்ற புதிய அரசியல் கட்சித் தொடங்கப்பட்டுள்ளதை எலோன் மஸ்க் அறிவித்துள்ளார். ஜூலை 4 அன்று மஸ்க் தனது ஆதரவாளர்களிடம் புதிய கட்சியை நிறுவலாமா என்று கேட்டு ஒரு ஒன்லைன் கருத்துக்கணிப்பை வெளியிட்டிருந்தார்.
அதில் 65.4 சதவீதம் பேர்கள் ஆதரவளித்து வாக்களித்திருந்தனர். இதனையடுத்தே, புதிய கட்சி தொடர்பில் எலோன் மஸ்க் அறிவித்துள்ளார். நமது நாட்டை வீண்செலவு மற்றும் ஊழலால் திவாலாக்கும் விடயத்தில், நாம் ஒரு கட்சி முறையில் வாழ்கிறோம், ஜனநாயக முறை அல்ல அது.
இன்று, உங்கள் சுதந்திரத்தை உங்களுக்குத் திரும்பக் கொடுக்க அமெரிக்கக் கட்சி உருவாக்கப்பட்டது எனவும் மஸ்க் பதிவு செய்துள்ளார். வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்பிற்கு சிறப்பு ஆலோசகராகவும் அரசாங்க செயல்திறன் துறையை மேற்பார்வையிடுபவராகவும் மஸ்க் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
ஆனால் சமீப மாதங்களில் இருவரும் இடையேயான நட்புறவு பிரிவை சந்திக்க, இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். ட்ரம்ப் மற்றும் மஸ்க்கினிந்த உடன்பிறவா சகோதர உறவு நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்றே பல அமெரிக்க மக்களும் கணித்திருந்தனர்.
நன்றியுணர்வு இல்லாதவர்
ஜூலை 1ம் திகதிக்கு முன்னர் இருவரும் பிரிந்து விடுவார்கள் என்றும் சவால் விட்டனர். ட்ரம்பின் தேர்தல் பணிக்காக 288 மில்லியன் டொலர் செலவிட்ட எலோன் மஸ்க், இறுதியில் ட்ரம்பை மோசமாக பழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
ட்ரம்பின் புதிய Big Beautiful Bill என்பது மின்சார வாகனங்களுக்கான வரிச் சலுகைகள் முடிவுக்கு கொண்டு வருகிறது. டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மஸ்கின் கனவுத்திட்டமாகும் மின்சார வாகனங்கள்.
ட்ரம்பின் மசோதா பற்றாக்குறையை அதிகரிக்க செய்யும் என்பது மஸ்க்கின் வாதம். ஜனாதிபதி ட்ரம்ப் நன்றியுணர்வு இல்லாதவர் என்று சாடிய மஸ்க், தாம் இல்லாமல் தேர்தலில் ட்ரம்ப் தோற்றிருப்பார் என்றும் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |