'டெஸ்லா நிறுவனம் மூடப்படும்' பரபரப்பை ஏற்படுத்திய எலான் மஸ்க்!
எலான் மஸ்க் தனது டெஸ்லா நிறுவன கார்கள் உளவு பார்க்க பயன்படுத்தபட்டால், நிறுவனம் நிச்சயமாக மூடப்படும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சீனாவில் இருந்தாலும் சரி, வேறு எந்த நாட்டில் இருந்தாலும் சரி டெஸ்லா கார்களை உளவு பார்க்க பயன்படுத்தினால் இது தான்நடக்கும் என எலான் மஸ்க் கூறியுள்ளார்.
டெஸ்லா கார்களில் பிரதானமாக பொருத்தப்பட்டுள்ள கமெராக்கள் குறித்து, பாதுகாப்பு காரணங்களுக்காக சீன இராணுவம் டெஸ்லா கார்களை மட்டும் அதன் வளாகங்களுக்குள் நுழைய தடை விதித்துள்ளதாக வெள்ளிக்கிழமை செய்தி வெளியனது.
அதற்கு பதிலளிக்கும் விதமாக எலான் மஸ்க் ஒரு முக்கிய சீன மன்றத்தில் ஒரு மெய்நிகர் விவாதத்தின் போது "டெஸ்லா சீனாவில் மட்டுமல்ல, எங்கு உளவு பார்க்க கார்களைப் பயன்படுத்தினாலும், எனது நிறுவனம் எளிதாக மூடப்படும்" என்று கூறினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சீனாவில் அதிக முதலீடு செய்துள்ள மஸ்க், நீண்டகால நன்மைகளைப் பெற, அமேரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையிலும் பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
2019 ஆம் ஆண்டில், மஸ்க் டெஸ்லாவின் முதல் உற்பத்தி வசதியை அமெரிக்காவிற்கு வெளியே சீனாவின் ஷாங்காயில் திறந்தார்.
டெஸ்லா விரைவில் சீனாவின் உள்நாட்டு சந்தையில் நம்பர் ஒன் எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளராக பிரபலமடைந்தது, வேறு எந்த மின் வாகனத்தையும் விட, டெஸ்லா கடந்த ஆண்டு சீனாவில் கிட்டத்தட்ட 1,50,000 கார்களை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.