பிரித்தானியாவில் பிளவை ஏற்படுத்தும் முயற்சி... எலோன் மஸ்க் மீது ஸ்டார்மர் குற்றச்சாட்டு
எலோன் மஸ்க் நமது அரசியலில் தலையிடுவதுடன், பிளவை ஏற்படுத்தவும் முயற்சிக்கிறார் என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிளவுகளைத் தூண்ட
பிரித்தானியாவில் கடந்த ஆண்டு இந்திய வம்சாவளி சீக்கிய இளைஞரால் கொல்லப்பட்ட ஹென்றி நோவாக் தொடர்பில் தமது எக்ஸ் தளத்தில் எலோன் மஸ்க் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

அவற்றில் பல, தீவிர வலதுசாரி கருத்துகளையும் வாதங்களையும் முன்வைக்கப்பட்டுள்ளன. ஹாம்ப்ஷயர் காவல்துறையின் நடவடிக்கைகளுக்குப் பதிலளிப்பது குறித்து விவாதிப்பதற்காக, ஸ்டார்மர் வியாழக்கிழமை பிற்பகல் டவுனிங் தெருவில் நோவாக்கின் குடும்பத்தினரைச் சந்திக்கவிருக்கிறார்.
கொலையாளி இனவெறித் தாக்குதல் நடத்தியதாகப் பொய்யாகக் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, கத்திக்குத்து காயங்களால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்தப் பதின்வயது மாணவனை ஹாம்ப்ஷயர் காவல்துறை கைது செய்ய முயன்ற சம்பவம் தொடர்பிலான காணொளி வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், யார்க்ஷயரில் உரையாற்றிய ஸ்டார்மர், ஒரு நாடாக நாம் யார் என்பதை நாம் உறுதியாக நிலைநிறுத்த வேண்டியதும் அவசியமாகும்; ஏனெனில், கடந்த சில நாட்களாக மஸ்க் மீண்டும் நமது அரசியலில் தலையிட்டு, பிளவுகளைத் தூண்ட முயன்று வருகிறார்.

இனத் தேசியவாதம்
பிரித்தானியாவில் நாம் அத்தகையவர்கள் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவில், நாம் பகுத்தறிவுள்ள, சகிப்புத்தன்மை கொண்ட மக்கள். ஹென்றி நோவாக் என்பவரின் வழக்கு போன்ற ஒரு பயங்கரமான சூழலை நாம் எதிர்கொள்ளும்போது, அவருடைய குடும்பத்தினர் செய்தது போலவே நாமும் அமைதியாகவே நடந்துகொள்கிறோம் என்றார்.
மஸ்க் இனத் தேசியவாத கருத்தை வழக்கமாகப் பதிவிட்டு வருபவர்; மேலும், Reform UK கட்சியின் முன்னாள் தலைவரான ரூபர்ட் லோவால் தொடங்கப்பட்ட தீவிர வலதுசாரி கட்சியான Restore Britain-இன் தீவிர ஆதரவாளராகவும் திகழ்கிறார்.

விக்ரம் திக்வா என்பவரால் கத்திக் குத்து காயங்களுக்கு ஆளாகி, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நோவாக் என்பவரின் வழக்கு, பிரித்தானியா வெள்ளையின மக்களுக்கு எதிராகப் பாரபட்சத்துடன் நடந்துகொள்வதைச் சுட்டிக்காட்டுவதாக மஸ்க் அண்மைய வாரங்களில் தொடர்ந்து வாதிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |