ட்ரம்பிற்கு எதிராக அமெரிக்க மக்களைத் திரட்டும் எலோன் மஸ்க்: விரிவான பின்னணி
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சிறப்பு வரி மற்றும் செலவு மசோதாவிற்கு எதிராக மீண்டும் எலோன் மஸ்க் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடனில் சிக்க வைக்கும்
வாஷிங்டனில் உள்ள தங்கள் பிரதிநிதிகளிடம் மசோதாவிற்கு எதிராக செயல்படுங்கள் என்று கேட்டுக்கொள்ள அமெரிக்க மக்களுக்கு எலோன் மஸ்க் அழைப்பு விடுத்துள்ளார்.
மிகப்பெரிய வரிச் சலுகைகள் மற்றும் அதிக பாதுகாப்புச் செலவுகளை உள்ளடக்கிய இந்த பட்ஜெட், கடந்த மாதம் பிரதிநிதிகள் சபையால் நிறைவேற்றப்பட்டு, தற்போது செனட்டர்களால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இந்த மசோதாவானது அமெரிக்க பட்ஜெட் பற்றாக்குறையை அதிகரிக்கும் என்றும் அமெரிக்க மக்களை மீள முடியாத கடனில் சிக்க வைக்கும் என்றும் எலோன் மஸ்க் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
மட்டுமின்றி இந்த மசோதாவை குறிப்பிட்டு, இது ஒரு அருவருப்பான செயல் என்றே எலோன் மஸ்க் விமர்சித்துள்ளார். ட்ரம்பின் இந்த மசோதாவால், இதுவரை உடன்பிறவா சகோதரர்கள் என கொண்டாடப்பட்ட எலோன் மஸ்க் மற்றும் ட்ரம்பிடையே விரிசல் தீவிரமடைந்துள்ளது.
இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவு உள்ளது, மேலும் இது காங்கிரஸில் நிறைவேற்றப்பட்டால் அவரது இரண்டாவது பதவிக்கால கொள்கை முடிவின் சட்டப்பூர்வ அங்கீகாரமாக இருக்கும்.
அமெரிக்க மக்களின்
ஆனால் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தவர்களை கடுமையாக விமர்சித்த எலோன் மஸ்க், வெட்கக்கேடான செயல் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்த மசோதாவை ஆதரிக்கும் அரசியல்வாதிகளை அடுத்த ஆண்டு இடைக்காலத் தேர்தல்களில் பதவி நீக்கம் செய்ய எலோன் மஸ்க் முயற்சிக்கலாம் என கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் செலவுகளை குறைக்கும் அமைப்பை முன்னெடுத்து வந்த எலோன் மஸ்க் 129 நாட்கள் ட்ரம்ப் நிர்வாகத்தில் பணியாற்றியதன் பின்னர் கடந்த வாரம் தடாலடியாக வெளியேறினார்.
இந்த நிலையில், பொதுவெளியில் ட்ரம்பிற்கு எதிரான அவரது கருத்து அமெரிக்க மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மட்டுமின்றி ட்ரம்பின் தீவிர ஆதரவாளர்கள் சிலர் மஸ்க் முன்வைக்கும் கருத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |