கிராமத்து ஸ்டைல் ஆட்டுக்கறி வறுவல்: எப்படி செய்வது?
அசைவ உணவுகளில் ஆரோக்கியம் நிறைந்தது ஆட்டுக்கறி. மற்ற உணவுகளை காட்டிலும் ஆட்டுக்கறி சமைக்கும் போது வீடே மணக்கும்.
ஆட்டுக்கறி தொடங்கி ஈரல், எலும்பு, குடல், தலைக்கறி, சூப் என பல வகைகளில் செய்யலாம்.
அதிலும் ஆட்டுக்கறியில், அரைத்த மசாலா சேர்த்து செய்யப்படும் வறுவல் சாப்பிடவே அட்டகாசமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
வேகவைக்க
- ஆட்டுக்கறி- 1kg
- எண்ணெய்- 150ml
- பட்டை- 1 துண்டு
- கிராம்பு- 3
- பிரிஞ்சி இலை- 1
- நட்சத்திர பூ- 1
- கல்பாசி- 2
- சின்ன வெங்காயம்- 1 கைப்பிடி
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2
- மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
வறுத்து அரைக்க
- கொத்தமல்லி- 5 ஸ்பூன்
- வர மிளகாய்- 8
- சோம்பு- 1 ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- பட்டை- 2 துண்டு
- ஏலக்காய்- 5
- கிராம்பு- 4
- கல்பாசி- 2
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- சின்ன வெங்காயம்- 2 ஸ்பூன்
- தக்காளி- 4
- இஞ்சி- 1 துண்டு
- பூண்டு- 7
- கறிவேப்பிலை- 2 கொத்து
- தேங்காய்- ½ மூடி
- கொத்தமல்லி இலை- 1 கொத்து
செய்முறை
முதலில் ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, அன்னாசி பூ, கல்பாசி சேர்த்து பொரிந்ததும் இதில் சின்ன வெங்காயம் சேர்த்து பென்ன்னிறமாக வதக்கவும்.
பின் இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 3 நிமிடம் நன்கு வதக்கவும். பின் இதில் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள ஆட்டுக்கறி சேர்த்து நன்கு வதக்கவும்.
ஆட்டுக்கறி நன்கு வதங்கி வந்ததும் இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேகவைக்கவும்.
அடுத்த மசாலா அரைக்க வாணலில் கொத்தமல்லி விதை, வர மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பின் அதில் சோம்பு, சீரகம், பட்டை, ஏலக்காய், கல்பாசி, கிராம்பு சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பின் அதே வாணலில் எண்ணெய் சேர்த்து அதில் சின்ன வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கிய பின் தேங்காய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கவும்.
அரைத்த மசாலாக்களை ஒன்றாக சேர்த்து தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கி வேகவைத்த ஆட்டுக்கறி சேர்த்து கலந்து அதில் அரைத்து வைத்த மசாலா சேர்த்து வதக்கவும்.
பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்கவிட்டு இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான ஆட்டுக்கறி வறுவல் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |