மதுரை ஸ்பெஷல் மட்டன் கறி தோசை: அதே சுவையில் எப்படி செய்வது?
மதுரையில் கறி சோறு இல்லாமல் ஊர் திருவிழாக்களை பார்ப்பது மிகவும் அரிது.
அந்தவகையில் மதுரை ஹொட்டல்களில் கிடைக்கும் கறி தோசை என்ற உணவு பிரபலமான ஒன்று.
வீட்டிலேயே சுவையான மதுரை ஸ்பெஷல் மட்டன் கறி தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நல்லெண்ணெய்- தேவையான அளவு
- பட்டை- 2 துண்டு
- கிராம்பு- 3
- ஏலக்காய்- 2
- கல் பாசி- 2
- கறிவேப்பிலை- சிறிதளவு
- பச்சைமிளகாய்- 1
- வெங்காயம்- 2
- தக்காளி- 2
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
- மிளகாய் தூள்- ½ ஸ்பூன்
- தனியா தூள்- ½ ஸ்பூன்
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
- உப்பு- தேவையான அளவு
- முட்டை- 2
- மட்டன் கொத்து கறி- ¼ kg
- தோசை மாவு- தேவையான அளவு
- கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
- சீராக தூள்- ½ ஸ்பூன்
- சோம்பு தூள்- ½ ஸ்பூன்
- மிளகு தூள்- ¼ ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, கல் பாசி சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின் அதில் பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
இதனைத்தொடர்ந்து அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதங்கியதும் மட்டன் கொத்து கறி சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீராக தூள், சோம்பு தூள், தனியா தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மட்டனை நன்கு வேக வைக்கவும். மட்டன் நன்கு வெந்து கிரேவி போல் வந்ததும் அதில் கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் மட்டன் கொத்து கறி தயார்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் முட்டை சேர்த்து அதில் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
இறுதியாக, அடுப்பில் தோசை கல் வைத்து அதில் தோசை ஊற்றி அதில் கலந்து வைத்துள்ள முட்டை சேர்த்து அதன் மேல் செய்துவைத்துள்ள மட்டன் கொத்து கறி சேர்க்கவும்.
பின் தோசையில் எண்ணெய் சேர்த்து தோசை வெந்ததும் திரும்பி போட்டு வேக வைத்து பரிமாறினால் சுவையான மதுரை ஸ்டைல் மட்டன் கறி தோசை தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |