என் கனவு நிஜமாகிவிட்டது... திருமணமானதுமே கணவனை பிரிந்த அகதிப்பெண்ணுக்கு மூன்று ஆண்டுகளுக்கு பின் கிடைத்துள்ள மகிழ்ச்சி
திருமணமான குறுகிய காலகட்டத்திலேயே பிரிந்த ஒரு அகதி தம்பதியர், கிட்டத்தட்ட முன்று ஆண்டுகளுக்குப்பின் கனடாவில் புதிதாக தங்கள் வாழ்க்கையைத் துவக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் பெரு மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.
ரஷீத் அஹ்மதும் (Rashid Ahmed) வீர்தா ரஷீதும் (Virdah Rashid) அஹ்மதியா என்னும் சிறுபான்மை இஸ்லாமியப் பிரிவைச் சார்ந்தவர்கள். வீர்தா, பாகிஸ்தானிலிருந்து தப்பியோடி 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானில் அகதியாக வாழ்ந்துவந்தார்.
2081ஆம் ஆண்டு, ரஷீத் அஹ்மதும் வீர்தா ரஷீதும் திருமணம் செய்துகொண்டார்கள். ஆனால், உடனடியாக ரஷீத் கனடா திரும்ப, வாழ்க்கை தொலைபேசியிலேயே தொடர்ந்தது. அபூர்வமாக விடுப்பு கிடைத்து சில முறைகள் மட்டும் மனைவியை சென்று சந்தித்து கனடா திரும்பினார் அவர்.
இந்நிலையில் வீர்தா கர்ப்பமாக, அவரது பிரசவ நேரம் நெருங்கும்போது விசா கிடைக்க, அவரால் கனடா வர இயலாமற்போயிற்று. இன்னொரு பக்கம், ரஷீதின் விமானம் ரத்தாக, அவரால் பிரசவ நேரத்தில் மனைவியுடம் இருக்க முடியாமல் போய்விட்டது.
கணவரும் அருகில் இல்லாமல், பெற்றோரும் அருகில் இல்லாமல் குழந்தை பெற்றெடுத்திருக்கிறார் வீர்தா. இதற்கிடையில் குழந்தையின் இதயத்துடிப்பில் பிரச்சினை இருப்பதாக மருத்துவர்கள் கூற, கனடாவிலிருந்து கண்ணீர் விடுவதைத் தவிர ரஷீதால் எதுவும் செய்யமுடியவில்லை.
ஆனால், ரஷீதின் கண்ணீருக்கு ஒரு முடிவு வந்துவிட்டது. ஆம், வீர்தாவும், குழந்தை மிச்செலும் புதன்கிழமை கனடாவுக்கு வந்துவிட்டார்கள். ’உண்மையாகவே நான் கனடாவுக்கு வந்துவிட்டேனா, என்னால் நம்பவே முடியவில்லை’ என்கிறார் வீர்தா!
முதன்முறையாக நெகிழ்ச்சியுடன் தன் மகளை கைகளில் ஏந்திக்கொள்கிறார் ரஷீத்.
தம்பதியர் Saskatoonஇல் தங்கள் குழந்தையுடன் புது வாழ்வைத் துவங்க இருக்கிறார்கள்.
மீண்டும் தன் ஆசிரியப் பணியைத் துவங்க இருப்பதாக தெரிவிக்கும் வீர்தா, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், என் கனவு மெய்ப்பட்டது என்கிறார்.