ஜேர்மனியில் புகலிடக்கோரிக்கை உரிமை இருக்கிறதா இல்லையா? அமைச்சர் விளக்கம்
புகலிடம் வழங்குதல் தொடர்பில் ஜேர்மனி முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளது போல் தெரிகிறது.
சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த ஜேர்மன் உள்துறை அமைச்சரின் கூற்றுக்கள் அதை உறுதி செய்வது போல் அமைந்துள்ளன.
முரண்பட்ட கருத்துக்கள்
ஜேர்மன் உள்துறை அமைச்சரான அலெக்சாண்டர் (Alexander Dobrindt), தங்கள் அரசு எல்லைக்கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளதாகவும், புகலிடக்கோரிக்கையாளர்கள் எல்லையிலேயே திருப்பி அனுப்பப்படுவதாகவும், ஜேர்மனியில் வாழும் புலம்பெயர்ந்தோரின் குடும்பத்தினர் அவர்களுடன் இணைந்துகொள்வது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Nina Haase/DW
அரசின் புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள் காரணமாக ஜேர்மனியில் புகலிடம் கோருவோர் எண்ணிக்கை 60 சதவிகிதம் வரை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கும் அலெக்சாண்டர், அது சட்டவிரோத புலம்பெயர்தல் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதையே காட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஜேர்மனியில் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் குறைந்துள்ளதற்கு காரணம் வேறு என்கிறார்கள் புலம்பெயர்தல் வல்லுநர்கள்.
சிரியாவில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்துள்ளதும், கிரீஸ் நாட்டிலிருந்து ஆஸ்திரியா வரையிலான பால்கன் பாதையில் கடுமையான கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதும் கூட ஜேர்மனியில் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் குறைந்துள்ளதற்கு காரணம் என்கிறார்கள் அவர்கள்.
Ints Kalnins/REUTERS
இதற்கிடையில், தான் தனிப்பட்ட வகையிலான புகலிடக்கோரிக்கை உரிமையை கட்டுப்படுத்தப்போவதில்லை என்றும் கூறியுள்ளார் உள்துறை அமைச்சரான அலெக்சாண்டர்.
அதாவது, ஜேர்மனியின் தனிப்பட்ட வகையிலான புகலிடக்கோரிக்கை உரிமை என்னும் விடயம் இருக்கத்தான் செய்கிறது என்று கூறியுள்ள அவர், நான் அதைக் கேள்வி கேட்கவில்லை, புகலிடக்கோரிக்கை உரிமை தவறாகப் பயன்படுத்தப்படுவதைத்தான் நான் கேள்வி கேட்கிறேன் என்கிறார்.
ஆக, ஒரு பக்கம் புகலிடக்கோரிக்கையாளர்களை நாட்டின் எல்லையிலேயே திருப்பி அனுப்புவதாகவும், அதனால் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் கூறும் ஜேர்மனி, அதே நேரத்தில் ஜேர்மனியில் புகலிடக்கோரிக்கை உரிமை உள்ளது எனக் கூறுவது, அரசு புகலிடக்கோரிக்கை விடயத்தில் முரண்பட்டக் கருத்துக்களைக் கொண்டுள்ளதையே காட்டுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |