அரைகுறை ஆடையில் குற்றுயிராக மீட்கப்பட்ட சிறுவன்: 20 ஆண்டுகளுக்கு பிறகும் துப்புத்துலங்காத மர்மம்
சுவிட்சர்லாந்தின் வாலைஸ் மாநிலத்தில் 7 வயது சிறுவன் கொடூரமாக தாக்கப்பட்ட வழக்கில், இதுநாள் வரையில் துப்புத்துலங்காமல் மர்மம் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது சுமார் 20 ஆண்டுகள் ஆன நிலையில் வழக்கை கைவிடுவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளது, தொடர்புடைய குடும்பத்தாரை மொத்தமாக உலுக்கியுள்ளது.
கடந்த 2002 பிப்ரவரி மாதம் 7 வயதேயான சிறுவன் Luca Mongelli கொடூரமாக தாக்கப்பட்டு, மிகவும் ஆபத்தான நிலையில் தாயாரால் மீட்கப்பட்டான். கடும் பனிப்பொழிவில் பல மணி நேரம் சுய நினைவின்றி கிடந்ததால், உடல் வெப்பநிலை 23 டிகிரி அளவுக்கு சரிந்தது.
சிறுவன் மீட்கப்படும் போது இதயம் மற்றும் நுரையீரல் ஸ்தம்பித்துப் போயிருந்தது. இந்த நிலையில் சுமார் 4 மாதங்கள் கோமாவில் இருந்த சிறுவன் பின்னர் படிப்படியாக மீண்டு வந்தான். இருப்பினும், அந்த பிப்ரவரி 7ம் திகதி என்ன நடந்தது என்பது இதுவரை மர்மமாகவே நீடிக்கிறது.
தற்போது Luca Mongelli கழுத்துக்கு கீழே ஸ்தம்பித்த நிலையிலும், பார்வை கோளாறாலும் அவதிப்பட்டு வருகிறார். இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து வந்த வாலைஸ் விசாரணை குழு, இந்த ஆண்டு துவக்கத்தில் இரு சாட்சிகளை விசாரித்துள்ளது. ஆனால் எவ்வித முன்னேற்றமும் அதனால் ஏற்படவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
மேலும், சியோன் பகுதியை சேர்ந்த இளம் வயதினர் சிலர் தம்மை மிருகத்தனமாக தாக்கியதாக பாதிக்கப்பட்ட சிறுவன் அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்பட்டதில், அந்த இளம் வயதினர் செல்வாக்கு மிகுந்த இரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும், ஆனால் அவர்களுக்கு எதிராக சாட்சிகள் இல்லை எனவும் கூறப்பட்டது.
மட்டுமின்றி சம்பவம் நடந்ததாக கூறப்படும் வேளையில் தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு சென்றிருந்ததாகவும் அவர்களின் பெற்றோர்கள் சாதித்தனர்.
தற்போது இந்த வழக்கு கைவிடப்பட்டாலும், சாட்சியங்களும் போதிய ஆதாரமும் சிக்கினால் மீண்டும் விசாரணைக்கு முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பு உறுதி அளித்துள்ளது.