கனடாவில் சிறுபிள்ளையுடன் காரில் பயணித்த நபரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்களால் பரபரப்பு
கனேடிய நகர் ஒன்றில் தன் மகனுடன் காரில் பயணித்த ஒருவர் மர்ம நபர்களால் சுடப்பட்டார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Coquitlam என்ற நகரில், தன் ஒன்பது வயது மகனுடன் காரில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார் ஒருவர்.
அப்போது, திடீரென மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் அந்த நபரின் கார் மீது சரமாரியாக சுட்டிருக்கிறார்கள். இந்த சம்பவத்தில் அந்த நபருக்கு காயம் ஏற்பட்டாலும், அவருக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
இதில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய விடயம் என்னவென்றால், அதே காரில் அந்த நபருடைய மகனும் அமர்ந்திருந்திருக்கிறான். அவன் பின் பக்க இருக்கையில் அமர்ந்திருந்ததாலோ என்னவோ, அதிர்ஷ்டவசமாக, அவனுக்கு உடலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இது தற்செயலாக நடந்த தாக்குதல் அல்ல என்று மட்டும் கூறியுள்ள பொலிசார், அதே நேரத்தில், அது அப்பகுதியில் நிலவி வரும் இரு கேங்குகளுக்கிடையிலான மோதல் தொடர்பானதா என இப்போதைக்கு கூற இயலவில்லை என்று கூறியுள்ளார்கள்.
அத்துடன், சம்பவத்தை நேரில் பார்த்த யாராவது இருந்தால், அது குறித்து தெரிவிக்க முன்வருமாறு பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.