மாயமான இரண்டு அழகிய இந்திய வம்சாவளிக் குழந்தைகள்: அதிரவைத்த துயர கண்டுபிடிப்பு
அமெரிக்காவில், இந்திய வம்சாவளியினரான இரண்டு குழந்தைகள் காணாமல் போனார்கள். பொலிசாரின் தேடுதல் வேட்டையில், அவர்கள் இருவருமே குளம் ஒன்றில் விழுந்துகிடந்தது தெரியவந்தது.
மாயமான இந்திய வம்சாவளிக் குழந்தைகள்
அமெரிக்காவின் Holtsville என்னும் நகரில் வாழ்ந்து வந்த, இந்திய வம்சாவளியினரான டேவிட், சுதா தம்பதியரின் பிள்ளைகளான, கிரேஸ் (Selah Grace Gali, 2) மற்றும் ரூத் (Ruth Evangeline, 4) என்னும் இரண்டு பிள்ளைகளும் சனிக்கிழமை காணாமல் போயுள்ளார்கள்.
சுதா அவசர உதவியை அழைக்க, விரைந்து வந்த பொலிசாருடன், அக்கம்பக்கத்தில் வாழும் மக்களும் பிள்ளைகளைத் தேடத் துவங்கியுள்ளார்கள்.
துயர கண்டுபிடிப்பு
சிறிது நேரத்தில், சற்று தொலைவிலுள்ள குளம் ஒன்றில் இரண்டு பிள்ளைகளும் கிடப்பது தெரியவரவே, ஓடோடிச் சென்ற Bella Baldi (14) என்னும் சிறுமி, பிள்ளைகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சை கொடுக்கமுயன்றுள்ளாள்.
சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் வர, இரண்டு பிள்ளைகளும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், பிள்ளைகள் இருவரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்கள்.
இன்னொரு துயரம் என்னவென்றால், பிள்ளைகளை தாய் சுதாவும், பிள்ளைகளின் பாட்டியும்தான் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். பிள்ளைகளின் தந்தையான டேவிட் அந்த நேரத்தில் இந்தியா சென்றிருந்திருக்கிறார்.
பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாமல், இரண்டு பிள்ளைகளையும் ஒரே நேரத்தில் இழந்து, அவர்களுடைய பெற்றோர் செய்வதறியாமல் திகைத்துப் போயிருக்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |