லண்டனில் மர்மமான முறையில் மாயமான பெண்... உடல் பாகங்கள் கிடைத்துள்ளதால் குடும்பத்தார் அதிர்ச்சி
லண்டனில் இளம்பெண் ஒருவர் திடீரென மர்மமான முறையில் மாயமான வழக்கில் மற்றொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தெற்கு லண்டனில் வாழ்ந்துவந்த Sarah Everard (33) என்ற இளம்பெண், கடந்த புதனன்று தனது நண்பர் வீட்டுக்குச் சென்று திரும்பும்போது திடீரென காணாமல் போனார்.
லண்டனில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எதிர்பாராதவிதமாக கென்ட் பகுதியில் வாழும் பொலிஸ் அதிகாரி ஒருவர் இந்த வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டதால் மக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
Wayne Couzens (48) என்ற அந்த பொலிசாரும், அவருக்கு உதவியதாக 39 வயது பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
Wayne, Sarahவை கடத்தியிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததன் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வழக்கில் மற்றொரு முக்கிய திருப்பமாக Wayne வாழும் கென்ட் பகுதியில், ஒரு இளம்பெண்ணின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதனால், Sarah கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. என்றாலும், கண்டுபிடிக்கப்பட்ட உடல் Sarahஉடையதுதானா என பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும்.
காணாமல் போன Sarah கிடைத்துவிடுவார் என நம்பிக்கொண்டிருந்த அவரது குடும்பத்தினர், இந்த செய்தியைக் கேட்டு கடும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளனர்.
இன்னொரு பக்கம், நல்ல மனிதர் என பலரும் கூறும் பொலிசாரான Wayne, இப்படி ஒரு காரியத்தைச் செய்திருக்க மாட்டார் என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். வழக்கு விசாரணை தொடர்கிறது.


