உலகம் முழுவதும் குழந்தைகளுக்குள் பரவிவரும் மர்ம நோய்: கனடாவுக்குள்ளும் நுழைந்தது...
உலகம் முழுவதும் குழந்தைகளை மட்டும் குறிவைக்கும் மர்ம ஹெபடைடிஸ் நோய் ஒன்று பரவிவரும் நிலையில், தற்போது அது கனடாவுக்குள்ளும் நுழைந்துள்ளது.
பொதுவாக ஹெபடைடிஸ் என்னும் நோய், A, B, C, D அல்லது E வகை ஹெபடைடிஸ் வைரஸ்களால் உருவாகும். ஆனால், இம்முறை உலக நாடுகள் பலவற்றில் பரவி வரும் இந்த மர்ம ஹெபடைடிஸ், மேற்குறிப்பிட்ட எந்த வைரஸாலும் உருவாகவில்லை.
பிரித்தானியா, அமெரிக்கா உட்பட உலகின் 14 நாடுகளில் பரவி, சுமார் 200 சிறுபிள்ளைகளைத் தாக்கியுள்ள இந்த ஹெபடைடிஸ் எதனால் பரவுகிறது, அல்லது எந்த வைரஸ் இந்த நோயை உருவாக்குகிறது என்பதை அறியாமல் மருத்துவ உலகம் குழம்பிப்போயுள்ள நிலையில், இந்த மர்ம நோய்க்கு ஒரு குழந்தை பலியாகியுள்ளதுடன், 17 குழந்தைகளுக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை செய்யப்படவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
கனடாவின் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்த மர்ம நோய் பிரித்தானியாவிலும், அமெரிக்காவிலும் பரவிவரும் ஹெபடைடிஸுடன் தொடர்புடையதா என்பதை அறிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.