அனைவருக்கும் எட்டும் பிசியோதெரபி ஆலோசனை: விரைவில் அறிமுகமாகும் ‘என் பிசியோ’ செயலி
பிசியோதெரபி ஆலோசனையை சுலபமாக பெற வழி செய்யும் வகையில் “என் பிசியோ” என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
என் பிசியோ அறிமுகம்
மாறி வரும் வாழ்க்கை சூழ்நிலையில் தற்போது உள்ள பெரும்பாலான வேலைகள் மனிதர்களின் உடல் உழைப்புகளை முற்றிலும் குறைப்பதாகவே உள்ளது.
இதனால் அனைவருக்கும் உடற்பயிற்சி என்பது முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது, அதே சமயம் இத்தகைய உடற்பயிற்சிகள் குறித்த ஆலோசனைகளை வழங்க கூடிய பிசியோதெரபி மருத்துவர்களின் தேவையும் அதிகரித்து விட்டது.
இந்நிலையில் பிசியோதெரபி சேவைகளை அனைத்து மக்களுக்கும் எளிதாக கிடைக்கும் விதமாக ‘என் பிசியோ’ (N PHYSIO) என்ற மொபைல் செயலியை மதுரையை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் மருத்துவர்கள் அறிமுகப்படுத்த உள்ளனர்.
சிறப்பம்சங்கள்
இந்த மருத்துவ செயலி மூலம் பிசியோதெரபி சிகிச்சை தேவைப்படும் மக்கள் தங்கள் அருகில் உள்ள பிசியோதெரபிஸ்ட் சேவைகளை கண்டறிய முடியும்.
வீட்டிற்கு நேரில் வந்து பிசியோதெரபிஸ்ட் சிகிச்சை வழங்கும் மருத்துவர்களை இந்த செயலியின் உதவி கொண்டு அழைக்க முடியும்.
மேலும் ஆன்லைன் ஆலோசனைகள் பெறுவது ஆகியவற்றை இந்த செயலி மூலம் சுலபமாக பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என் பிசியோ ஒருங்கிணைப்பாளர் வழங்கிய தகவல்
பெண்கள் மற்றும் முதியவர்கள் பிசியோதெரபி சிகிச்சை பெறுவதில் தயக்கம் காட்டுகின்றனர், எனவே அவர்கள் இந்த செயலின் மூலம் எளிதாக பிசியோதெரபிஸ்ட் மருத்துவர்களை தொடர்பு கொண்டு நேரடியாகவோ ஆன்லைன் வசதிகள் மூலமாக அறிவுரை பெற்றுக் கொள்ளலாம் என என் பிசியோ ஒருங்கிணைப்பாளர் வெ.கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.
இந்த செயலின் மூலம் காலம் மற்றும் பண விரயம் தவிர்க்கப்படும், இந்த செயலியின் முக்கிய நோக்கம் கிராமப்புற மக்களுக்கும் எளிதில் ஆர்த்தோ, நியூரோ, ஃபிட்னஸ், கார்டியோ ஆகிய பிசியோதெரபிஸ்ட் சிகிச்சைகள் கிடைக்க செய்வதே ஆகும் என தெரிவித்துள்ளார்.