கொங்கு ஸ்டைல் வறுத்து அரைத்த நாட்டுக்கோழி தண்ணீ குழம்பு: எப்படி செய்வது?
எலும்புகளை ஆரோக்கியமாக்கும் நாட்டுக்கோழி இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது.
எனவே நாட்டுக்கோழி சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும்.
நாட்டுக்கோழியில் சுவையான கொங்கு ஸ்டைல் வறுத்து அரைத்த நாட்டுக்கோழி தண்ணீ குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- நாட்டுக்கோழி- 1kg
- சின்ன வெங்காயம்- ¼ kg
- தக்காளி- 3
- பச்சை மிளகாய்- 3
- குழம்பு தூள்- 3 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- மல்லி தூள்- 3 ஸ்பூன்
- சோம்பு - 1½ ஸ்பூன்
- கசகசா- 1 ஸ்பூன்
- தேங்காய்- ½ மூடி
- கொத்தமல்லி விதை- 2 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்- 10
- மிளகு- ½ ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- பட்டை- 2 துண்டு
- கல்பாசி- 4
- ஏலக்காய்- 2
- கறிவேப்பிலை- 1 கொத்து
- கொத்தமல்லி இலை- 1 கைப்பிடி
- உப்பு- தேவையான அளவு
- நல்லெண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு வாணலில் 3 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் மிதமான தீயில் வைத்து இதில் கொத்தமல்லி விதை, காய்ந்த மிளகாய், சீரகம், சோம்பு, பட்டை, கல்பாசி, ஏலக்காய், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
நன்கு வதக்கியதும் அதில் துருவிய தேங்காய் சேர்த்து பொன்னிறமாக வறுத்தபின் அடுப்பை அனைத்து இதனை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
அடுத்து இதே வாணலில் 3 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் இதில் சின்ன வெங்காயம், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் இதில் தக்காளி, கசகசா சேர்த்து நன்கு வதக்கி, பின் மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து ½ டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கிய பின் அடுப்பை அனைத்து ஆறவைத்து இதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து குழம்பு செய்ய முதலில் ஒரு வானலை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் சோம்பு, காய்ந்த மிளகாய், கொத்தமல்லி இலை, நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
இதனை தொடர்ந்து அதில் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி சுத்தம் செய்து வைத்துள்ள நாட்டு கோழி சேர்த்து 10 நிமிடம் வதக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
பின் இதில் குழம்பு தூள் சேர்த்து நாட்டு கோழி மூழ்கின்ற அளவிற்கு தண்ணீர் சேர்த்து ½ மணி நேரம் நன்கு கொதிக்கவிட்டு பின் அரைத்த வைத்த மசாலாக்களை சேர்த்து கிளறி நன்கு கொதிக்க விடவும்.
இறுதியாக இது நன்கு கொதித்து வந்ததும் இதில் கருவேப்பிலை, கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான கொங்கு ஸ்டைல் வறுத்து அரைத்த நாட்டுக்கோழி தண்ணீ குழம்பு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |