விடுதலையாகியும் விடாத சோகம்! பிரியும் கணவர் முருகன்.. கண்ணீரோடு வேன் பின் ஓடிய நளினி
சிறையில் இருந்து விடுதலையான நளினி, கணவர் முருகன் உட்கார வைக்கப்பட்டிருந்த வேன் பின்னால் கண்ணீரோடு ஓடியது காண்போர் மனதை கலங்கடிதத்து.
நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த 7 தமிழர்களில் பேரறிவாளன் சில மாதங்களுக்கு முன்னர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் மற்ற ஆறு பேரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் நேற்று முன் தினம் தீர்ப்பளித்தது. இதையடுத்து நளினி உள்ளிட்ட ஆறுபேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
ஆனால் இந்த ஆறு பேரில் நளினியின் கணவர் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் இலங்கை தமிழர்கள் ஆவார்கள். அதனால் அவர்கள் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமுக்கு நேற்று நள்ளிரவு அழைத்துவரப்பட்டனர்.
முன்னதாக விடுதலையாகியும் விடாத சோகம் என்பது போல தன்னுடன் தனது கணவர் முருகன் தன்னுடன் வராமல் பிரிந்து வேனில் சிறப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்படுவதை பார்த்த நளினி வேதனைப்பட்டார்.
வேன் பின்னால் கண்ணீருடன் ஓடிய நளினி
இதையடுத்து முருகன் அழைத்து செல்லப்பட்ட பொலிஸ் வேனின் ஜன்னலைப் பிடித்து கொண்டே சிறிது தூரம் கண்ணீரோடு ஓடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர் 30 ஆண்டுகள் கடந்த விடுதலையான பின்பும் கணவர் முருகனால் வீட்டிற்கு வர முடியாத சூழல் நிலவுகிறதே இதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் எனக் கேட்டார்.
இந்த கேள்வியைக் கேட்டவுடன் நளினியால் சில நொடிகள் எதுவுமே பேச முடியவில்லை. அவரது கண்களில் பரிதவிப்பு அனைவராலும் பார்க்க முடிந்தது. கணவர் வீட்டிற்கு வர முடியாத சூழல் மகிழ்ச்சியானதாக இல்லை என்பது போலத் தலையசைத்தார்.
இனிமேல் தான் கணவருக்காகவும் மகளுக்காகவும் ஒரு சாதாரண குடும்பத் தலைவியாக வாழப் போவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், முருகன் தன்னிடம் ஏன் அழுகிறாய், நான் முகாமிற்கு தானே செல்கிறேன் என கூறியதாக தெரிவித்த நளினி முருகனை முகாமில் இருந்து விடுவித்து அவர் குடும்பத்தோடு சேர வைத்து பிள்ளையுடன் சேர்ந்து வாழ வைக்க வேண்டும் என கூறினார்.