மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடிகை நமீதாவுக்கு அனுமதி மறுப்பு? நடந்தது என்ன
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனத்துக்கு சென்ற நடிகை நமீதாவிடம் இந்து என்பதற்கான சான்றிதழ் கேட்டதாக கூறப்பட்ட நிலையில் கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
என்ன நடந்தது?
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இதனால் பாதுகாப்பிற்காக இந்து மதத்தினர் மட்டும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வழிபட அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை தனது கணவருடன் நடிகை நமீதா மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த கோயில் அதிகாரி ஒருவர் நமீதாவிடம், "நீங்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவரா, அதற்கான சான்றிதழ் எதுவும் உள்ளதா?" என்று கேட்டுள்ளார்.
அதற்கு அவர், நானும் எனது கணவரும் பிறப்பிலேயே இந்து தான், பல்வேறு கோயில்களில் சாமி தரிசனம் செய்துள்ளோம்" என்று கூறியுள்ளார்.
இதன் பின்னர் அந்த அதிகாரி, "குங்குமம் வைத்துக் கொண்டு சாமி தரிசனம் செய்யச் செல்லுங்கள்" என்று கூறியதாக சொல்லப்படுகிறது. அதற்கு அவரும் குங்குமம் வைத்துக்கொண்டு சாமி தரிசனம் செய்ததாக தெரிகிறது.
இந்நிலையில், நடிகை நமீதா கோயிலில் நடந்தது குறித்து வீடியோவாக வெளியிட்டு இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக கோயில் நிர்வாகம் தரப்பில், "பொதுவாக முகக்கவசம் அணிந்து வருவோரிடம் விவரம் கேட்பது நடைமுறை. அதே போல முகக்கவசம் அணிந்து வந்த நமீதாவிடம் விவரம் கேட்கப்பட்டுள்ளது.
அதுதவிர வேறு ஒன்றுமில்லை. அவர் நடிகை என்பது முன்கூட்டியே எங்களுக்கு தெரியாது" என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |