பிரித்தானியாவில் கோழி இறைச்சிப் பற்றாக்குறை: 45 கடைகளை மூடிய பிரபல உணவகம்!
பிரித்தானியாவில் கோழி இறைச்சிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், சுமார் 45 Nando's உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
பிரித்தானியாவில், ஊழியர்கள் பற்றாக்குறையால், விநியோகம் தடைபட்டுப் போனதில் பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, போதுமான லொறி ஓட்டுநர்கள் இல்லாதது, விநியோகத்தைப் பாரிய அளவில் பாதித்துள்ளது. கிருமித்தொற்றுச் சூழலில், ஊழியர்களைப் பணியமர்த்துவதில் நிறுவனங்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியது ஊழியர்கள் பற்றாக்குறைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
பிரெக்சிட்டுக்குப்பின், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த சுமார் 20,000 ஓட்டுநர்கள் அவரவர் நாட்டுக்குத் திரும்பியதால், பிரித்தானியாவில் சரக்குவாகன ஓட்டுநர்களுக்குப் பற்றாக்குறை நிலவுகிறது.
இந்நிலையில், பிரித்தானியாவில் பிரபலமான Nando's உணவகத்தின் சிறப்பு உணவான peri peri கோழி இறைச்சிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், சுமார் 45 Nando's உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
தடைபட்டுள்ள கோழி இறைச்சி விநியோகத்தை மீண்டும் தொடர Nando's நிறுவனம் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.