ஐந்தே நாளில் சம்பாதித்த ரூ 579 கோடி... கணவர் அரசியல் பிரபலம்: யார் இந்த நாரா புவனேஸ்வரி
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி நாரா புவனேஸ்வரி ஐந்தே நாளில் தமது சொத்து மதிப்பில் ரூ 579 கோடியை சேர்த்துள்ளார்.
என் டி ராமராவின் மகள்
ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான என் டி ராமராவின் மகள் தான் நாரா புவனேஸ்வரி. குடும்ப நிறுவனமான Heritage Foods-ல் இவருக்கு 2.2 கோடிக்கு மேல் பங்குகள் உள்ளது.
என் டி ராமராவின் 12 பிள்ளைகளில் நாரா புவனேஸ்வரியும் ஒருவர். NTR என பரவலாக அறியப்படும் என் டி ராமராவ் இந்திய சினிமாவின் மிகவும் செல்வாக்கு மிக்க நடிகர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் வரிசையில் ஒருவராக கருதப்படுபவர்.
மட்டுமின்றி அரசியல்வாதியாகவும் புகழின் உச்சிக்கு சென்றவர். ஆனால் தமது மருமகன் சந்திரபாபு நாயுடுவுடனான அரசியல் மோதலில், தாம் உருவாக்கிய தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.
இந்தியா முழுக்க பேசப்பட்ட இந்த சம்பவம் நடந்து சில மாதங்களுக்கு பின்னர், 1996ல் தமது 72வது வயதில் என் டி ராமராவ் காலமானார். இதன் பின்னர் தெலுங்கு தேசம் கட்சியின் முதன்மை தலைவராக சந்திரபாபு நாயுடு பொறுப்புக்கு வந்தார்.
இவரது மனைவியே நாரா புவனேஸ்வரி. தந்தையும் கணவரும் மகனும் அரசியல் களம் கண்ட போதும், நாரா புவனேஸ்வரி குடும்ப தொழிலில் கோலோச்சினார். Heritage Foods நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நாரா புவனேஸ்வரி செயல்பட்டு வருகிறார்.
ராக்கெட் வேகத்தில்
Heritage Foods நிறுவனத்தின் இன்னொரு நிறுவனர் சந்திரபாபு நாயுடு. சமீபத்திய நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி பெரும் வெற்றிகளை குவித்துள்ளதுடன், மாநிலத்தில் ஆட்சியையும் கைப்பற்றியுள்ளது.
இதனால் Heritage Foods நிறுவனத்தின் பங்குகள் ராக்கெட் வேகத்தில் குதித்துள்ளது. தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் பங்குச்சந்தை சரிவை எதிர்கொண்டாலும், இடையே 5 நாட்கள் Heritage Foods நிறுவனத்தின் பங்குகள் ரூ 402.90ல் இருந்து ரூ 659க்கு குதித்துள்ளது.
அதாவது Heritage Foods நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கும் தலா ரூ 256.10 லாபம் ஈட்டியது. BSE வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், Heritage Foods நிறுவனத்தில் நாரா புவனேஸ்வரிக்கு 2.2 கோடி பங்குகள் உள்ளன.
இதனால் ஐந்தே நாளில் சுமார் 579 கோடி தொகையை ஆதாயம் பார்த்துள்ளார் நாரா புவனேஸ்வரி. இவர் மட்டுமின்றி, இவரது மகன் நாரா லோகேஷும் சுமார் 237.8 கோடி அளவுக்கு இந்த 5 நாட்களில் சம்பாதித்துள்ளார்.
ஆந்திராவில் பாஜகவுடன் இணைந்து தெலுங்கு தேசம் கட்சி நாடாளுமன்ற தேர்தலை சந்தித்துள்ளது. போட்டியிட்ட 17 தொகுதிகளில் 16 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |