குடும்பத்துடன் பயங்கரமான விமான விபத்தில் சிக்கி NASCAR ஜாம்பவான் மரணம்
நாஸ்கார் சாரதி கிரெக் பிஃபிள் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒரு தனியார் பயணிகள் விமான விபத்தில் சிக்கி உடல் கருகி மரணமடைந்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவயிடத்தில் மரணம்
குறித்தத் துயரச் சம்பவம் நடந்தபோது, கிரெக் பிஃபிள், அவரது மனைவி கிறிஸ்டினா க்ரோசு, மகள் எம்மா மற்றும் அவர்களது மகன் ரைடர் ஆகியோர் அந்த பயணிகள் விமானத்தில் இருந்தனர்.

பிஃபிள் குடும்ப நண்பரான கிளீட்டஸ் மெக்ஃபார்லேண்டின் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், அந்த விபத்தில் நால்வருமே சம்பவயிடத்தில் மரணமடைந்துள்ளனர் என்றே தெரிய வருகிறது.
துரதிர்ஷ்டவசமாக, கிரெக் பிஃபிள், அவரது மனைவி கிறிஸ்டினா, மகள் எம்மா மற்றும் மகன் ரைடர் ஆகியோர் அந்த விமானத்தில் இருந்தனர் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடிகிறது... ஏனெனில் அவர்கள் எங்களுடன் மதியப் பொழுதைக் கழிக்க வந்து கொண்டிருந்தார்கள்.
நாங்கள் மிகுந்த துயரத்தில் இருக்கிறோம். இதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு நான் மிகவும் வருந்துகிறேன் என்று மெக்ஃபார்லேண்ட் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிஃபிள் குடும்பத்தினர் பயணப்பட்ட செஸ்னா C550 விமானமானது, ஸ்டேட்ஸ்வில்லே பிராந்திய விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, புளோரிடாவின் சரசோட்டாவிற்குச் சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில், சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில், ஓடுபாதையில் விமானம் முழுவதுமாகத் தீப்பிடித்து எரிவதும், விமான நிலைய வளாகத்திலிருந்து ஒரு பெரிய கரும் புகை மேகம் எழுவதும் பதிவாகியிருந்தது.
சாம்பியன்ஷிப் வென்ற முதல் சாரதி
கிரெக் பிஃபிள் முன்னாள் நாஸ்கார் நட்சத்திர சாரதியாவார். இவர் இரண்டு தேசிய தொடர்களில் சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றதுடன், பின்னர் நீண்ட காலமாக கிண்ணத்திற்கான போட்டிகளில் பங்கேற்கும் ஒரு போட்டியாளராகவும் திகழ்ந்தார்.
1995ல் நாஸ்கார் தொடர் ஒன்றில் கலந்துகொண்டு, கவனம் ஈர்த்தார். டிரக்ஸ் மற்றும் எக்ஸ்ஃபினிட்டி ஆகிய இரண்டு பிரிவுகளிலும் சாம்பியன்ஷிப் வென்ற முதல் சாரதி கிரெக் பிஃபிள்.

2002 முதல் 2016 வரை முழுநேரமாக கப் சீரிஸில் பந்தயங்களில் பங்கேற்றார், மொத்தம் 515 பந்தயங்களில் 19 வெற்றிகளைப் பெற்றார். 2005-ல் இரண்டாவது இடத்தைப் பிடித்தது உட்பட, அவர் தரவரிசையில் ஆறு முறை முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்தார்.
2023 ஆம் ஆண்டில், நாஸ்கார் அவரைத் தனது 75 சிறந்த சாரதிகளில் ஒருவராக அடையாளப்படுத்தியது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |