டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழன் நடராஜன் சேர்க்கப்படாதது ஏன்? ஏமாற்றமடைந்த ரசிகர்களுக்கு கிடைத்த பதில்
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்படாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்த நிலையில் அதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் 17ஆம் திகதி முதல் நவம்பர் 14ஆம் திகதி வரை டி20 உலகக்கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரரான நடராஜன் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் பெருமளவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட நடராஜன் ஆஸ்திரேலிய தொடரின் போது இந்திய அணிக்கு அறிமுகமாகி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நடராஜன் சேர்க்கப்படாதது குறித்து எழுந்த கேள்விக்காக பேசிய இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா பேசுகையில், நடராஜன் பெயரும் இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் விவாதிக்கப்பட்டது.
ஆனால் அவர் தற்போது தான் காயத்தில் இருந்து மீண்டுள்ளதால் அவரை அணியில் சேர்க்க முடியவில்லை.
அதுமட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் மைதானங்கள் அனைத்தும் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதனால் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக நடராஜனுக்கு இடம் அளிக்க முடியவில்லை என்று தனது தெளிவான தகவலை வெளியிட்டுள்ளார்.