இப்போதைக்கு என்னுடைய இலக்கு எல்லாம் இதுதான்! மீண்டும் கலக்க தயாராகும் தமிழன் நடராஜன்
இப்போதைக்கு என்னுடைய இலக்கு எல்லாம் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்பது தான் என தமிழக வீரர் நடராஜன் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவுஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் நெட் பவுலராக தேர்வான நடராஜன் அங்கு சென்ற பின்னர் வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என அனைத்து பார்மெட்களிலும் அறிமுகமாகி அசத்தினார்.
அதனை தொடர்ந்து இங்கிலாந்து தொடரிலும் இடம்பிடித்த அவர் ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அந்த தொடரின் பாதியிலேயே விலகினார்.
பின்னர் காயத்திற்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்ட நடராஜன் காயத்தில் இருந்து தற்போது மீண்டு மெல்ல மெல்ல தனது பயிற்சிகளை துவங்கி வருகிறார்.
இந்நிலையில் நடராஜன் சமீபத்தில் அளித்த பேட்டியில், அறுவை சிகிச்சைக்குப் பிறகு நான் தற்போது பூரண குணமடைந்து இருக்கிறேன். என்னுடைய பயிற்சியை மெல்ல மெல்ல ஆரம்பித்துள்ளேன்.
தற்போது வலைப்பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறேன். ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய போது நான் மிகவும் வருத்தப்பட்டேன். ஆனால் ஐபிஎல் ஒத்தி வைக்கப்பட்ட போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
இப்போதைக்கு என்னுடைய இலக்கு எல்லாம் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும். அதன் பின்னர் நான் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யப்படுவேன் என நம்புவதாக கூறியுள்ளார்.